கல்முனை வடக்கு விவகாரம்: உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் இன்றுடன் நிறைவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் எனக் கோரி, ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கல்முனை சுபத்ரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து உரையாற்றினார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துரலிய ரத்தன தேரர், ஞானசார தேரர் போன்றோராலும், அரச தரப்பினராலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டே, தமது உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுசெய்யப்படுகின்றது என சங்கரத்ன தேரர் தனதுரையில் தெரிவித்தார்.

தமது கோரிக்கையில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும், குறித்த காலப்பகுதியினுள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் தமது போராட்டம் மீண்டும் மிகப்பெரியளவில் வெடிக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால், தாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம், தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் நிறைவுசெய்வதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை, தாம் விழிப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று நண்பகல் நிறைவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *