ஐ.தே.முவின் பங்காளிகள் கூட்டம் வேட்பாளர் தொடர்பில் முடிவேதுமின்றி முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற சந்திப்பு, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தவித முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படாத நிலையில், சில கட்சிகள் தமது வேட்பாளரை அறிவித்துள்ளன. இதற்காக வேண்டி, ஐக்கிய தேசிய முன்னணி அவசரப்பட வேண்டிய தேவை இல்லை எனவும், இன்னும் போதியளவு கால அவகாசம் காணப்படுகின்றது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் இந்தக் கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ப.திகாம்பரம், சம்பிக்க ரணவக்க போன்றோர் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கும்படி ஒற்றைக்காலில் நின்றனர் என்றும், தமது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றமையால் சில தினங்களில் அது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிச் சமாளித்தார் என்றும் அறியவந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவரான ரிஷாத் பதியுதீன் பங்குபற்றவில்லை என்றும், அவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றமையை விரும்புகின்றார் என்றும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *