அரசியல் தீர்வு பற்றி விரிவாகப் பேச புதுடில்லி வரவேண்டும் கூட்டமைப்பு! – சம்பந்தன் குழுவிடம் மோடி நேரில் அழைப்பு

அரசியல் தீர்வு பற்றி விரிவாக – ஆழமாகக் கலந்துரையாட புதுடில்லிக்கு வருமாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியப் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திட்டமிட்டதைவிட குறைவான நேரமே இந்தச் சந்திப்பு நடந்தது.

சந்திப்பின் ஆரம்பத்தில், இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றமைக்காக நரேந்திர மோடிக்கு இரா.சம்பந்தனும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி.

இதனையடுத்து தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டன.

“இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான அரசமைப்புகள் தமிழ் மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ வேண்டும். பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு ஆகக்கூடிய கரிசனை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு முயற்சியில் இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்க இனியும் அனுமதிக்க முடியாது” என்று இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்தார்.

அவரின் கருத்துக்களை மிகக் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்த மோடி, “இது பற்றி என்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். எனினும், இது தொடர்பில் நாம் விரிவாகப் பேச வேண்டும். இன்று பேசுவதற்கு நேரம் போதாமல் இருக்கின்றது. எனவே, அரசியல் தீர்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடலை நடத்த நீங்கள் அனைவரும் புதுடில்லிக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படியும் அங்கிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவுக்கான விமான சேவைகளை முதலில் ஆரம்பிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பில் கடந்த தடவை நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயத்தையும் கூட்டமைப்பினர் ஞாபகப்படுத்தினர். இதைச் செவிமடுத்த மோடி, இதில் கவனம் செலுத்தும்படி இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சந்திப்பின் இறுதியில், “என்றும் நாம் உங்களுக்குத் தோள் கொடுப்போம். இந்தியா வாருங்கள். எல்லா விடயங்களையும் விரிவாகப் பேசுவோம்” என்று மோடி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *