இலங்கையர்களின் ஆயுட்காலம் குறைந்தது

2019ஆம் ஆண்டளவில் எமது நாட்டில் வாழும் ஆண்களில் ஆயுட்காலம் 78ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 82ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது இந்த தரவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாம் முன்னெடுத்த திட்டங்கள ஊடாக சிறந்த தரவுகள் இருந்தன. ஆனால், தற்போது ஆயுட்காலம் குறைந்துள்ளது.

பெண்களது ஆயுட்காலம் 80ஆகவும் ஆண்களது ஆயுட்காலம் 76ஆகவும் குறைந்துள்ளது. சிசுகள் மற்றும் குழமைந்த பிரசுவித்த தாய்மார்களின் மரணமும் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டளவில் நாம் அமெரிக்காவின் நிலையை எட்டியிருந்தோம். அதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனமும் சிறந்த சுகாதார சேவைகளை முன்னெடுக்கும் நாடாக இலங்கையை அறிவித்தது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் தொற்று நோய் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அவதானம் செலுத்தி இந்த தரவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

துறைசார் அமைச்சர் உரிய தரப்பினர்களை அழைத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

இதற்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட “ஆரொ பிளான்ட்“ வேலைத்திட்டம் சிறந்ததோர் திட்டமாகும். அதன் ஊடாக பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்காவிலும் மக்களின் ஆயுட்காலம் 78ஆகதான் உள்ளது. அந்த அளவில் பேண வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதன் காரணமாகவே குறிப்பிடத்தக்களவு சிசுகள் மற்றும் குழந்தை பிரசுவித்த தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்துள்ளன.

அதனைக் கட்டுப்படுத்த விசேட நிபுணர்கள் மற்றும் துறைசார் அனுபவமிக்கவர்களின் குழுவொன்றை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.” என்றார்.

இதேவேளை, உலகில் இராசாயன உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக இலங்கை உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் கடந்த சில ஆண்டகளாக தொற்றா நோய்களும் அதிகரித்துள்ளன.

இலங்கையில் உள்ள துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குறித்து அரசாங்கம் நிர்ணயித்துள்ள தரவுகளின் பிரகாரம் உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை. இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளும் போதிளயவில் இல்லை என்பதாலேயே தொற்றா நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 6 மில்லியனுக்கும் அதிக மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

இலங்கை மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பானது ஆரோக்கியமான மற்றும் போதுமான உணவின் அணுகலைக்கட்டுப்படுத்துவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *