இலங்கை ‘பௌத்த நாடு’ என்பதை இனியும் உலகம் ஏற்றுக்கொள்ளாது! – அமைச்சர் மனோ கருத்து

“கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை இராஜிநாமா செய்யும் நிலைமைக்குத் தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது.”

– இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின்போது, முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்தார்கள். அதை நானும், அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொள்ள மறுத்தோம். இது இனவாதிகளுக்கு பணிந்து இடம் கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும், முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

அங்கே பேசும்போது நான் ஒரு விடயத்தை சொன்னேன். இன்று காலை, இலங்கை பொலிஸின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுடனும், அதே புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் நான் உரையாடினேன். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன எனவும், அவற்றை நீங்கள் விசாரிக்கவில்லை எனவும் எதிரணியினரும், பல பௌத்த துறவிகளும் கூறுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேட்டேன்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது இங்கே வந்து எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன்வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் தந்துள்ளது வெறுமனே புகார் கடிதங்கள் மட்டுமே. அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைதுசெய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது. அவற்றில் ஒன்றும் இல்லை. இங்கே வந்து இப்படியான கடிதங்களை தருபவர்கள், வெளியே போய் ஊடகங்களிடம் வீராவேசமாக கதைக்கின்றார்கள்.

ஆனால், இப்படி கதைப்பவர்கள் முதலில், கைது செய்ய, விசாரிக்க உருப்படியான தடயங்களைத் தர வேண்டும். எங்களிடம் எதுவும் தரப்படவில்லை. ஆகவே, எங்களால் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என இலங்கைப் பொலிஸின் புலனாய்வுத்துறைக்குப் பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுடனும், பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் என்னிடம் கூறினார்கள். இதை நான் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கூறினேன்.

ஆகவே, முஸ்லிம் அமைச்சர்கள் மீது புகார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். இதற்கு ஜூலை ஒன்றாம் திகதிவரை காலக்கெடு வழங்குகின்றேன் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என நான் யோசனை கூறியுள்ளேன். இதைக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கூறினார்கள்.

இந்த யோசனையை நான் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கூறவுள்ளேன். சபாநாயகர் கரு ஜயசூரியவும், இது தொடர்பில், எவர் மீதும் சாட்சியங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் ஜூலை ஒன்றாம் திகதிக்கும் முன் அறிவியுங்கள் எனப் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து பதிலைப் பெற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எமக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறவுள்ளேன்.

இன்று முஸ்லிம் அமைச்சர்களைப் பதவி விலகக் கூறி ஊர்வலம் போய், ஆர்ப்பாட்டம் செய்து, உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள் நாளை மீண்டும் ஒரு முறை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பிறகு தமிழ் – சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பின்னர் தாம் விரும்பாத சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அவர்களைப் பதவி விலகக் கூறி சிங்கள மக்களைத் தூண்டி விட்டு குரல் எழுப்புவார்கள்.

இந்தப் பேரினவாதிகளுக்கு ஆதரவாக மறந்தும் போய் எவரும் ஆதரவு தெரிவித்துவிடக்கூடாது. அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

இந்தப் பேரினவாத இயக்கத்துக்கு அரசியல் ரீதியாக ஒரு முடிவு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த நாட்டின் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *