அலரி மாளிகையில் ரணிலுடன் மஹிந்த பேசியது என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முற்பகல் அவசர சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் உட்பட பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டன எனவும், சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் ஒன்றரை மணி நேரமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை, பிரதமர் ரணிலுடன் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும், மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிவும் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை நெருக்கடி மற்றும் மக்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

“நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போது உருவாகியுள்ள அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட கருத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மஹி த ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டார்” என்று அமைச்சர் மங்கள மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *