ஜனாதிபதி வேட்பாளருக்கு ரணிலே மிகப் பொருத்தம்! – சஜித் முன்பாக சங்கக்கார அதிரடிக் கருத்து

“ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு.”

– இப்படி அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார.

குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, குமார் சங்கக்கார ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித், “கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் களத்தில் நான் கையாண்டு வருகின்றேன். இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது” என்று கூறியிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற சர்ச்சை ஐ.தே.கவுக்குள் மெல்ல எழுந்துள்ள நிலையில் சஜித் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

சஜித்தின் இந்தக் கருத்து தொடர்பில் குமார் சங்கக்காரவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி என்றால் அதற்குள் முரண்பாடுகள் வருவது வழமை. அதேவேளை, அரசியல்வாதிகளும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்களை வெளியிடுவதும் வழமை. நான் சாதாரண பிரஜை. அரசியலில் களம் இறங்கும் எண்ணமோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதியோ என்னிடம் இல்லை. எனினும், ஒவ்வொரு செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் தற்போது எழுந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *