கோட்டாவின் பதிலுக்காக காத்திருக்கிறார் வாசுதேவ!

“எமது கோரிக்கைகளுக்குக் கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் பதிலளிப்பார். அவரின் பதிலை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்துக்கு வருவோம்.”

– இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த புதன்கிழமை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பாக எங்களுக்குச் சில விமர்சனங்கள் இருக்கின்றன. அது தொடர்பாக எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி அவரை கடந்த புதன்கிழமை சந்தித்து தெளிவுபடுத்தினோம்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக சமல் ராஜபக்‌ஷவை நிறுத்துவதன் தேவைப்பாடு தொடர்பாகவும் அவரிடம் எடுத்துக் கூறினோம்.

அத்துடன் கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக எமது பக்கத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டால் நாங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது தொடர்பாக எமது கட்சி தீர்மானிக்கும். அதனால்தான் முன்கூட்டியே கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்பாக நாங்கள் தெரிவித்து வந்த விமர்சனங்கள் மற்றும் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இந்தச் சந்திப்பின்போது அவரிடம் கையளித்தோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *