ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்க சு.க. சதி! – ஐ.தே.க , பொதுஜன பெரமுன, கூட்டமைப்பு போர்க்கொடி

ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று தயாசிறி ஜெயசேகர நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

“2015 ஜூன் 21ஆம் திகதி சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளில் முடிவடைகிறது.

எனவே,  19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் திகதியே நடைமுறைக்கு வந்த அன்றில் இருந்தே, ஜனாதிபதியின்  ஐந்து ஆண்டு பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும்.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கருத்துக்கே தற்போது எதிர்ப்புகள் வலுக்க தொடங்கியுள்ளன. சுதந்திரக்கட்சியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமது அதிருப்தியை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ளது.

தயாசிறியின் அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,

“ 19ஆவது திருத்தச்சட்டம், ஜனாதிபதியின் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்திருக்கிறது.

19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் திகதி சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றது என்பதால், அன்றில் இருந்தே ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குகிறது என்பதே தயாசிறி ஜயசேகரவின் வாதம்.

ஆனால் இது அர்த்தமற்ற வாதம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாளில் இருந்தே, பதவிக்காலம் தொடங்குகிறது.

புதிய தலைமை நீதியரசர் பதவியேற்ற பின்னர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.இது வலுவான வழக்காக இருந்தால், அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அரசியலமைப்பின் 129 (03) பிரிவின் கீழ், இதுபோன்ற வழக்குகளை  குறைந்தது 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வே விசாரிக்க வேண்டும். தலைமை நீதியரசரால் தனித்து எதுவும் செய்து விட முடியாது.

இந்த முயற்சிகள் தற்போதைய தேர்தல் நடைமுறைகளை குழப்புகின்ற முயற்சியாகும். ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக பொதுஜன பெரமுன நீதிமன்றத்துக்குச் செல்லும்” என்றார்.

அதேவேளை, தாமும் நீதிமன்றம் சொல்வோம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

” சுதந்திரக்கட்சியின் கருத்து அர்த்தமற்றது. 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பதவிகாலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அச்சம் காரணமாகவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர்.” என்றும் சுட்டிக்காட்டியது.

இவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,

”ஏற்கனவே உயர்நீதிமன்றத்திடம் இதுபற்றி ஜனாதிபதி வினவினார். அதற்கு உரிய பதிலை உயர்நீதிமன்றம் வழங்கிவிட்டது. அதன்படி தேர்தல் ஆணைக்குழு உரிய நேரத்தில் தேர்தலை அறிவிக்கும்.

அப்படியான நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்பதென்பது அறிவிலித்தனமானது. முன்னர் சொன்னதை மீண்டும் கேட்க வேண்டுமா? 2015 ஜனவரி 9 ஆம் திகதி அவரது பதவிக்காலம் ஆரம்பிக்கின்றது. ஆறு வருடத்துக்குத் தெரிவான மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டு ஐந்து வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த ஜனாதிபதிக்கா என்ற கேள்விக்கே இடமில்லை. என்னைப் பொறுத்தவரை மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் சென்று மூக்குடைபடும் செயற்பாடாகவே இது இருக்கப் போகின்றது” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *