எமது தரப்புக்குச் சவால் வேட்பாளர் கோட்டாவே! – மனோ கூறுகின்றார்

ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்புக்குச் சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ச வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கோட்டாபய ராஜபக்ச குறித்து இன்று அதிகமாகப் பேசப்படுகின்றது. அவர் ஓர் அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்டவர்.

இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் அமெரிக்கப் பிரஜாவுரிமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டு வந்தால் இங்குபோட்டியிட முடியும். ஆனால், அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது சாதாரண விடயமல்ல. அதேபோல் அமெரிக்கப் பிரஜாவுரிமையை கைவிடுவதும் கடினமான விடயமாகும்.

அதேபோல் 19ஆவது திருத்தம் வந்துவிட்டது. இப்போது இரட்டைப் பிரஜாவுரிமை நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எமது தரப்புக்குச் சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய வருவதே நல்லதாகும்.

எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியில்தான் ஒரு பெறுமதி இருக்கும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்துவிட்டோம். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான ஒருவரான அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகுவிரைவில் அவரின் பெயரை அறிவிப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *