கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகத் திறமை குறித்து அழுவதா? சிரிப்பதா? – போட்டுத் தாக்குகின்றது ‘இனி இது இரகசியம் அல்ல’

“தந்தை செல்வா நினைவு தின நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டமை குறித்து கொழும்புத் தமிழ்ச் சங்கமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையும் மாறிமாறி வெளியிட்ட அறிக்கைகளையும் தகவல்களையும் பார்க்கும்போது 76 வருடங்கள் தமிழ்ப் பணியாற்றிய நிர்வாகத் திறன் கொண்ட அமைப்பு என்று தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அந்த நிர்வாகத் திறமை குறித்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாத சந்தேக நிலை ஏற்பட்டது.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் (05.04.2019) ‘இனி இது இரகசியம் அல்ல’ என்ற பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘மின்னல்’ என்ற பெயரில் வெளிவருகின்ற அப்பத்தியில் கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொழும்புத் தமிழ்ச் சங்கம் குறித்துக் கடந்த வெள்ளிக்கிழமை (29.03.2019) இப்பத்தியில் பிரஸ்தாபித்திருந்தேன்.

“தந்தை செல்வா நினைவு தின நிகழ்வை இம்முறை அங்கு (தமிழ்ச் சங்கத்தில்) நடத்துவதற்கு இணங்கியிருக்கின்றது தமிழ்ச் சங்கம். ஏதோ திருந்திவிட்டினம் போலை” – என்று சாரப்பட நான் குறிப்பிட்டிருந்தேன்.

(செவ்வாய்க்கிழமை (02.04.2019) மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலை தந்தை செல்வா நினைவுநாள் கூட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்ரை கொழும்புக் கிளை நடத்துகின்றது. கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாதான் கூட்டத்துக்குத் தலைமை. மும்மூர்த்திகளும்தான் பேச்சாளர்கள் (சம்பந்தன், மாவை, சுமந்திரன்). நினைவுப் பேருரையை சம்பந்தன் ஆற்றுவார். மாவையரும், சுமந்திரனும் சிறப்புச் சொற்பொழிவு எண்டு நோட்டீஸ் அடிச்சிருக்கினம். இதிலை ஒரு விசயம் இருக்கின்றது. இவ்வளவு காலமும் தந்தை செல்வா நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒருநாளும் இடம்கொடுத்ததில்லை. கேட்டால் “நாங்கள் அரசியல் கூட்டங்கள் நடத்திறதுக்கு அனுமதி தருவதில்லை” என்று பெரிய வியாக்கியானம் கதைப்பினம் அதன் நிர்வாகிகள். ஆனால், மனோ கணேசனும், இராதாகிருஷ்ணனும் மற்ற ஆக்களும் வேறு ஏதேதோ விழாக்கள் எண்ட பெயரில் தமிழ்ச் சங்க மேடையில் ஏறி அரசியல் முழங்கி விட்டுப் போகப் பார்த்திருப்பினம்… அண்மையில் கூடக் கம்பன் கழகம் நடத்திய இத்தகைய ஒரு அரசியல் விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு இடம் வழங்க மறுத்துப் பிறகு பண்ணினவையள்… இப்ப… ஏதோ திருந்திவிட்டினம் போலை…)

ஆனால், அதற்குப் பிறகு கட்டவிழ்ந்த சம்பவங்கள் சந்தி சிரிக்கும் விவகாரமாயிற்று என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

தாங்கள் திருந்தவில்லை – திருந்தவே போவதில்லை என்பதை நிரூபித்திருக்கின்றது கொழும்புத் தமிழ்ச் சங்கம் என்று எனக்குத் தோன்றுகின்றது.

இவ்விடயத்தையொட்டி கொழும்பு தமிழ்ச் சங்கமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையும் மாறிமாறி வெளியிட்ட அறிக்கைகளையும் தகவல்களையும் பார்க்கும்போது 76 வருடங்கள் தமிழ்ப் பணியாற்றிய நிர்வாகத் திறன் கொண்ட அமைப்பு என்று தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அந்த நிர்வாகத் திறமை குறித்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாத சந்தேக நிலை எனக்கு ஏற்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை விநாயமாகவும், மீண்டும் மீண்டும் மன்றாட்டமாகவும் கேட்டதாம், அதனாலும் தங்கள் அமைப்பு பண்பாட்டு நிறுவனம் என்பதனாலும் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கோரும் வாசகம் அடங்கிய கடிதத்தை தாங்கள் கொடுத்தார்கள் என்றும் – இல்லையேல் மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமே இல்லை என்றும் எழுத்தில் மன்னிப்புக் கோரும் கடிதத்தை அனுப்பிவிட்டு தமிழ்ச் சங்கம் இப்போது கூறுவது அதன் 76 வருட நிர்வாக அனுபவத் திறமைக்கு இழுக்கன்றி வேறில்லை.

“சங்க மண்டபம் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வு ஒன்றுக்கோ வழங்கப்பட முடியாது என்பது சங்க விதி” – என்றும் சங்கம் குறிப்பிடுகின்றது. நல்லது. மாட்டைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னால், ஒரு மரத்தைப் பற்றி விவரித்து எழுதி விட்டுக் கடைசியாக இந்த மரத்தில் மாடு கட்டப்பட்டிருக்கின்றது என்று கட்டுரையைப் பூர்த்தி செய்வதன் மூலம் நிலைமையைச் சமாளிப்பது என்பார்கள்.

அதுபோன்றுதான் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது. வேறு ஏதோ ஏதோ பெயர்களில் – தலைப்புகளில் சங்கத்தின் மண்டபத்தைப் பதிவு செய்துவிட்டு அதில், அரசியல் கட்சித் தலைவர்களைப் பங்குபற்ற வைத்து, பலத்த அரசியலை – சர்ச்சைக் கருத்துக்களை அங்கு வைத்து அரசியல் பிரமுகர்கள் பேசிவிட்டுச் செல்வதுதான் இந்த சங்க விதிமுறையின் கீழ் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் ‘களவை’ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைக்குச் செய்யத் தெரியவில்லை. அதனால் அது பதிவு செய்த திகதிக்குத் தந்தை செல்வா நினைவு நிகழ்வை நடத்த முடியாமல் இரத்துச் செய்துவிட்டு முழுசுகின்றது.

இப்போது, இந்த நிகழ்வை, அதன் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலைப் பார்த்து அதன் அடிப்படையில், மண்டபத்தை வழங்க மறுத்து இரத்துச் செய்ததாகக் கூறும் கொழும்பு தமிழ்ச் சங்கம், இனிமேல் தனது மண்டபத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துத் தீர்க்கமான முடிவுகளை எடுத்தால் நல்லது என்று பரிந்துரைக்க விரும்புகின்றேன். செய்யுமா கொழும்புத் தமிழ்ச் சங்கம்? – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை செல்வா நினைவு தின நிகழ்வு விவகாரம் தொடர்பில் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்தில் ஏற்கனவே வந்த செய்திகள் வருமாறு:-

தந்தை செல்வா நினைவு நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு:
தவறான நடவடிக்கைக்கு தமிழரசுக் கட்சியிடம்
மன்னிப்புக் கேட்டது கொழும்புத் தமிழ்ச் சங்கம்
https://puthusudar.lk/2019/04/02/father-chelva-memorial-permission-denial-colombo-tamil-association/?fbclid=IwAR3t3GUohSkFM5m7HEU2-D3HtrhRYyOvx_0DnQZMA0rJUaUQa42Sr5cmd9g

தமிழரசுக் கட்சியுடன்
முட்டி மோதுகின்றது
கொ/ தமிழ்ச் சங்கம்!
‘மன்னிப்பு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம்
கொடுத்து இன்று காட்டமான அறிக்கை
https://puthusudar.lk/2019/04/03/colombo-branch-of-the-itak-colombo-tamil-sangam/?fbclid=IwAR2TNXtoIf9tlPYw_UJwjFtiVQ9YYe5dqcVCcrxRtjt-5OsUwr6yRmIW6d8

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *