கொவிட் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் இடங்கள் ஆய்வு!

ஓட்டமாவடி- சூடுபத்தினசேனை பிரதேசத்திற்கு இன்று காலை ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் குழு விஜயம்.

சுகாதார அமைச்சின் வர்த்தமானியும் அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியாகியதை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களது உடலங்களை அடக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டால் அதற்கு பொருத்தமான இடத்தினை அடையாளம் கண்டு ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் , ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஓட்டமாவடி பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா சபை கிளைகள் இணைந்து பல்வேறு முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பிரகாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த சம்மேளனம் மற்றும் உலமா சபை கிளை பிரதிநிதிகள் குழாம் இன்று காலை ஏற்கனவே அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சூடுபத்தினசேனை பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பின் குறித்த இடம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கான முன்னெடுப்புக்களில் எவ்வித தாமதங்களும் ஏற்படாத வண்ணம் முன்கூட்டியே சகல ஏற்பாடுகளையும் செய்து வைப்பதற்கான நகர்வுகள் அனைத்து தரப்புக்களது ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும்,அதற்காக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சகலவிதமான பங்களிப்புக்களையும் வழங்கும் என தலைவர் அல்ஹாஜ் எம்.எம் .முஹைதீன் தெரிவித்தார்.

இன்றைய தினம் காலை காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பிரதேசங்களில் இருந்து சம்மேளனம் மற்றும் உலமா சபை என்பவற்றில் இருந்து தலா 4பேர் வீதம் விஜயம் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று நண்பகல் குறித்த இடத்திற்கு பிரதேச செயலாளர் வீ.தவராசா ,மாவட்ட கொவிட் பொறுப்பாளர் பிரிகேடியர் பிரதீப் கமகே உட்பட அதிகாரிகள் குழுவினர் விஜயம் செய்து ஆய்வு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *