நாமும் வடக்கு, கிழக்கில் களமிறங்குவோம்! – தமிழரசுக் கட்சிக்கு மனோ பதிலடி

”இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன்.அதேவேளை, நாமும் வடக்கு, கிழக்கில் எமது கட்சிக் கிளைகளை அமைக்கலாம். அங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் கூட்டாகவோ, தனித்தோ செயற்படலாம்.”

– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் – குறிப்பாகக் கொழும்பில் – தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் சிறந்த அரசியல் புரிந்துணர்வு இருப்பதால், இரு தரப்புகளினதும் கோட்டைகளில் ஒருவருக்கொருவர் போட்டி அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற இணக்கம் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், மாவை சேனாதிராஜா எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து கொழும்பு வாழ் தமிழர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் குறித்த அறிவிப்பு குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் தனது முகநூலில் அறிவிப்பொன்றை பதிவிட்டுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழரசுக் கட்சி கொழும்பில் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதாகவும், இதுபற்றிய என் கருத்து என்ன என அநேகர் கேட்கிறார்கள். நான் என்ன சொல்ல? வாங்கோ, வாங்கோ என்றுதான் சொல்வேன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன்.

முழு இலங்கையைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ நிலைப்பாட்டை எப்போது தமிழரசு கைவிட்டதோ, அப்போதிருந்து இந்த உரிமை அந்தக் கட்சிக்கு இயல்பாக இருக்கின்றது.

இதுபற்றிய எனது இந்தக் கருத்தை இதற்கு முன்னமே பலமுறை நான் அறிவித்திருக்கின்றேன்.

ஜனநாயகக் கட்சி கிளைகளை யாரும் இந்த ஜனநாயக நாட்டில் எங்கும் அமைக்கலாம்.

நாமும் வடக்கு, கிழக்கில் எமது கட்சி கிளைகளை அமைக்கலாம். அங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் கூட்டாகவோ, தனித்தோ செயற்படலாம்.

இதுதான் ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அமைப்புகளின் நிலைப்பாடு” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *