ரணில் அரசு பதவியில் நீடிக்க கூட்டமைப்பு இனி ஆதரவு வழங்க முடியுமா? – ரெலோவின் செயலர் கேள்வி

“உலக அரங்கில் தான் ஒப்புக்கொண்ட பொறுப்புக்களை அப்பட்டமாக நிராகரிக்கின்ற இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் ஆதரவு வழங்கி, இந்த அரசு பதவியில் நீடிப்பதற்கு ஒத்துழைக்க முடியுமா என்பதே இப்போது எல்லோருக்கும் எழுந்துள்ள கேள்வி. ரணில் விக்கிரமசிங்க தனது சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார். அவருக்கு நன்றி கூறுகின்றேன். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் பந்து இருக்கின்றது. கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது. கூட்டமைப்பில் இருக்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் சுயமாக முடிவெடுக்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் பொதுச் செயலர் ந.சிறிகாந்தா தெரிவித்தார்.

‘ஐ.நா. தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியதற்காக அதன் பரிந்துரைகளை முழுமையாக ஏற்பதாக அர்த்தமில்லை. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியாது’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் மண்ணைத் தூவுவதில் உறுதியாக உள்ளது என்பதையே ரணிலின் கருத்து வெளிப்படுத்துகின்றது. அவரின் கருத்து ஆச்சரியத்துக்கு உரியதல்ல. அவருக்கு முன்னர் ஆட்சியிலிருந்த சிங்களத் தலைவர்கள் போன்று அவரும் நடந்து கொள்ள முற்படுகின்றார்.

அரசைக் காப்பாற்றவும், ஆட்சியை நெறிப்படுத்தவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் புதிய அரசமைப்பின் பெயரால் பெற்றுக் கொள்வதில் வெற்றி கொண்ட அவர், நாட்டின் அரசமைப்புக்கு தற்போது மதிப்பளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்க அறிவுரை கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் அரசு தொடர்பில், கூட்டமைப்பில் யாருக்காவது மன மயக்கமோ, மதி மயக்கமோ இருந்திருந்தால் அது இனிமேலும் நீடிக்கப்பட முடியாது. அது கலைக்கப்படவேண்டும்.

உலக அரங்கில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு உள்நாட்டில் அந்த அரசுடன் ஒட்டி உறவாடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அது நேர்மையான நடவடிக்கையும் இல்லை. ஒரு கையால் ரணில் அரசை அடித்துக் கொண்டு மறுகையால் அரவணைத்துக் கொண்டிருகின்ற அரசியலுக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

தமிழ் மக்கள் இறுதிப் போரில் நடந்தவை தொடர்பிலேயே விசாரணை கோருகின்றனர். அதையும் சவப்பெட்டிக்குள் போட்டு ஆணி அடித்து அதைக்குழியில் தோண்டிப் புதைக்கவேண்டும் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். பழைய நினைவுகளைக் கிளறவேண்டாம் என்கிறார். அது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார். இதுவும் ஒருவித வன்முறைதான்.

இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது. தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் புகழ்பெற்ற மறைந்த எம்.ஜி.ஆர், நம்பியார் பாணியில் இனியும் நாடகமாடிக் கொண்டிருக்க முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *