ஆழிப்பேரலையில் காவுகொண்ட உறவுகளை நினைந்துருகி சோகமயமானது தமிழர் தாயகம்! – கல்லறைகளைக் கட்டியணைத்து சொந்தங்கள் கதறல்

‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் கல்லறைகளுக்கு அவர்களின் சொந்தங்கள் சுடர் ஏற்றினர். அவர்கள், கல்லறைகளைக் கட்டியணைத்து கதறியழுதனர்.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அந்தப் பேரவலம் ஏற்படுத்திவிட்ட வலிகளிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பதற்கு இந்தக் கண்ணீர் கதறல் காட்சி சான்றாக அமைந்தது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை
நினைவாலயத்தில் அஞ்சலிகள்

வடக்கில் யாழ். மாவட்டத்தில் அதிக உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

அங்கு அமைந்துள்ள உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் இன்று காலை பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றுகூடி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு சம நேரத்தில் அவர்களின் சொந்தங்களினால் சுடரேற்றப்பட்டது.

முன்னதாக, ஆழிப்பேரலையில் சிக்குண்டு வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி ஆகிய இடங்களில் உயிர்நீத்த உறவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச்சுவர் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிர்நீத்த உறவுகளுக்கு அவர்களின் சொந்தங்கள், அரச அதிகாரிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுடரேற்றி – மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *