ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் ஏகமனதாகத் தெரிவு! – கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ கட்சியின் மத்திய செயற்குழுவினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 3 மணியளவில் ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில் – கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய மத்திய செயற்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டிய கொள்கைகளை இங்கு பிரதமர் ரணில் விளக்கினார். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனைவரும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சி பிளவுபடாமல் இருக்க இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் ரணில் இங்கு தெரிவித்தார்.

மத்திய செயற்குழு கூடுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போது சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட வைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டதுடன், மத்திய செயற்குழுவில் அங்கீகாரம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கமையவே மத்திய செயற்குழு கூடி இறுதி முடிவு எடுத்தது.

மத்திய செயற்குழுவின் முடிவை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு சில தினங்களில் நடைபெறவுள்ளது.

சஜித் ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். சஜித்துக்குப் பல அரசியல் பிரமுகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *