நவநீதம்பிள்ளையின் விசுவாசிகளே ஜெனிவாவில்! – சரத்அமுனுகம சாடல்

‘போர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தைஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை. ஜெனிவா மாநாட்டிலும் இதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான கலாநிதி சரத்அமுனுகம எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) நடைபெறும் வரவு – செலவுத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதிஒதுக்கீட்டு குறித்தான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன சிறப்பாக செயற்பட்டார். வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அதை மறந்து ‘நாடு’ குறித்து சிந்தித்தே ஜெனிவாவில் குரல் எழுப்பினோம்.

அதேபோல் இம்முறை மாற்றுபொறிமுறையொன்றை கையாள்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்த ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அதை நாம் ஏற்கவில்லை. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான காலவரையறையையும் ஏற்கவில்லை.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. எனவே, எங்கு என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பைமீறும் வகையில் தீர்மானங்களை எமக்கு எடுக்கமுடியாது.

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கிய சில நாடுகள், புலம்பெயர் அமைப்புகளின் தாளத்துக்கேற்ப செயற்பட்டன. கனடா சார்பில் புலம்பெயர் தமிழர் ஒருவரே மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

அதேபோல் ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளராக   நவநீதம் பிள்ளை செயற்பட்ட காலத்திலேயே இலங்கைக்கு எதிராக கண்மூடித்தனமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர் ஓய்வுபெற்றாலும், அவர்காலத்தில் செயற்பட்ட அதிகாரிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, இது குறித்தும் சிந்திக்கவேண்டும்.

‘போர்க்குற்ற’ விசாரணை என்ற கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு நீதி பொறிமுறையின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் சரத்அமுனுகம கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *