வலி. வடக்கில் கடற்படைக்குக் காணி: கைவிடப்பட்டன அளவீட்டுப் பணிகள்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி இறுதியில் கைவிடப்பட்டது.

நில அளவீட்டுத் திணைக்களத்தால் நேற்றுக் காணி அளவீட்டுப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு கீரிமலை, காங்கேசன்துறைப் பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மக்கள் நேற்றுத் தயாராக இருந்தனர். ஆயினும் காணி அளவீட்டுப் பணி நேற்று இடம்பெறவில்லை.

காணி அளவீட்டுப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரினால் நேற்றுமுன்தினம் தனக்கு அறிவிக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஆயினும், இந்த அறிவிப்பு நில அளவைத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை எனவும், திட்டமிட்டபடி நேற்று காணி அளவீடு இடம்பெறும் எனவும் திணைக்கள வட்டாரங்கள் கூறின. ஆயினும், பின்னர் அது இடம்பெறவில்லை.

232 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக நகுலேஸ்வரம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் நிலங்களைச் சுவீகரிப்பதற்கு நேற்று அளவீட்டுப் பணி இடம்பெறும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *