வவுனியா – பாரதிபுரத்தில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்!!!

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா – பாரதிபுரத்தில், 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது இவ்வீட்டுத்திட்டங்களுக்கான நிதியானது சீரான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்துக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

“ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்துக்கான அடுத்தகட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படாமையால் எமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளோம்.

மேலும் 2018ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டடப் பொருட்களின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளமையால் குறித்த ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அத்துடன், நாம் தற்போது மேலும் கடனாளியாகியுள்ளோம்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *