அர்ஜுன் மகேந்திரனை கொண்டுவர அனைத்து ஆவணங்களும் தயார் – சிங்கபூருக்கு விரைவில் விளக்கமளிப்பார் மைத்திரி!

” அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார். இதற்கான சட்டரீதியிலான ஆவணங்களும் இறுதிபடுத்தப்பட்டுள்ளன. எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி தரப்பிலிருந்து விரைவில் சிங்கபூருக்கு விளக்கமளிக்கப்படும்.”

-இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. இன்று ( 21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி.,

” அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதில் சிங்கபூர் மந்தகதியில் செயற்படுகின்றது. அந்நாட்டு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என்ற தொனியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், சிங்கபூர் நாட்டின் சட்டத்தின்பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆவணங்களை இலங்கை அரசாங்கம் இன்னும் கையளிக்கவில்லை என சிங்கபூர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன” என்று வினா எழுப்பினார்.

இதற்கு அரச தரப்பிலிருந்து எவரும் பதிலளிக்கவில்லை. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக விளங்கும், மஹிந்த அமரவீர எம்.பி. இது தொடர்பில் விளக்கமளித்தார்.

” அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்தும், அதற்கு சிங்கபூரால் வழங்கப்பட்டுள்ள பதில் குறித்தும் நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. தகவல் வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து சிங்கபூர் பிரதமருடன் தனிப்பட்ட ரீதியிலும் பேச்சு நடத்தியுள்ளேன் என்று இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் நிகழ்வின்போது ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கான அனைத்து சட்டரீதியிலான ஆவணங்களும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களிலும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தனிப்பட்ட ரீதியிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாட்டுக்கும், சிங்கபூருக்கும் விரைவில் ஜனாதிபதி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்படும்.” என்றார் மஹிந்த அமரவீர.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *