ஜெனிவாவில் இருந்தவாறு ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

– பிரேரணை வரைவில் திருத்தம் கோரும் 
முயற்சியைக் கைவிட்டது இலங்கை அரசு

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை வரைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரச தரப்புப் பிரதிநிதிகள் மேற்கொண்ட கடும் முயற்சி – பகீரதப் பிரயத்தனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனின் எச்சரிக்கையை அடுத்துக் கைவிடப்பட்டதாக ஜெனிவாவிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

புதிதாக வரவுள்ள பிரேரணை வரைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரச தரப்பு கடும் முயற்சியில் இறங்கியுள்ளது என்ற தகவல் சுமந்திரனின் காதில் எட்டியுள்ளது. இதனையடுத்து அந்தத் பிரேரணை வரைவில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படக்கூடாது என ஜெனிவாவிலிருந்தவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்.

இலங்கை அரச தரப்பின் சார்பில் இங்கிருந்து சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவினரே இந்த முயற்சியில் இறங்கியிருந்தனர்.

இந்த முயற்சிக்கு உடனடியாகவே முற்றுப்புள்ளி வைக்கும் எத்தனத்தில் இறங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனையடுத்து நேற்று தன்னைச் சந்தித்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடமும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பிரதிநிதிகளிடமும் இந்த விடயம் குறித்துப் பேசினார் சுமந்திரன் எம்.பி.

எக்காரணம் கொண்டும் ஏற்கனவே வெளியிடப்பட்ட பிரேரணை வரைவில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அவர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட பிரேரணை வரைவை இலங்கை மீறாமல் பார்த்துக் கொள்வது தமது கடமை என்று உறுப்பு நாடுகள் இதன்போது வாக்குறுதியளித்தன.

அதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரை நேற்றுச் சந்தித்துப் பேசியபோதும் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து சுமந்திரன் எம்.பி., பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜெனிவாவில் இருந்தவாறே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்தார். பிரேரணை வரைவில் அவ்வாறு மாற்றம் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என அவர் ரணிலிடம் கேட்டுக்கொண்டார்.

சுமந்திரன் எம்.பியின் எச்சரிக்கையை அடுத்து ஜெனிவாவிலுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைத் தொடர்புகொண்ட பிரதமர் ரணில், இந்த விடயம் குறித்துப் பேசியுள்ளார்.

இதையடுத்து, உடனடியாக ஜெனிவா வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தாங்கள் பிரேரணையில் திருத்தத்தைக் கோரவில்லை என்று தெரிவித்தார் என அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *