இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு பெரும் அணியினர் படையெடுப்பு!!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள்.

ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்தே இந்த அணிகள் களமிறங்குகின்றன. இது தவிர, வழக்கம்போல, முன்னாள் படையதிகாரிகளை கொண்ட, மஹிந்த சார்பு அணியும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை விவகாரங்களை இலங்கையே கவனித்துக்கொள்ளும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தியுடன் அவரின் குழுவொன்று ஜெனிவா பயணிக்கின்றது.

மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் அந்தக் குழுவில் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பால் கடுப்பாகிய ரணில் அரசு, பதில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஐ.நாவின் புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளதாக அறிவித்தது.

இந்தநிலையில், இப்போது அரச தரப்பிலும் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளது. திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்றை ரணில் அரசு அனுப்புகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் தரப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மல்லுக்கட்டப் போகின்றன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் பெரிய பட்டாளமொன்று ஜெனிவா பயணமாகின்றது.

எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் சில உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் எனப் பெரும் அணியொன்று ஜெனிவாவுக்குச் செல்கின்றது.

எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளிலேயே இந்த குழு ஜெனிவாவில் முகாமிடவுள்ளது.

இம்முறை ஜெனிவாவில் இலங்கையின் உள்நாட்டுக் குழப்பம் என்றுமில்லாத வகையில் எதிரொலிக்கவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் முடிவை ரணில் குழுவும், கூட்டமைப்பு குழுவும் கூட்டாக வலியுறுத்த, மைத்திரி தரப்பு அதை எதிர்க்க, சுவாரஸ்ய மோதல் அங்கு அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *