புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடரும்! – ரணில் திட்டவட்டம்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அடுத்தகட்டப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு அமைவாக சர்வகட்சிக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்திலுள்ள நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறைமை, அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இதில் நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியன தொடர்பில் அனைத்துக் கட்சிகளிடையேயும் இணக்கப்பாடு இல்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு காணப்படுகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இன்று ஏற்றுக்கொண்டன.

எனவே, இணக்கப்பாடுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்வதற்கு 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *