வடக்கு நாளை முற்றாக முடங்கும்! – சகல தரப்பினரும் முழு ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நாளை திங்கட்கிழமை வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாளை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அறிவித்துள்ளன.

இதனால் வடக்கு மாகாணத்தில் நாளைய தினம் போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக, வணிக, வங்கிச் சேவைகள் இடம்பெறா என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் தொழிற்சங்கங்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அலுவலகங்களின் செயற்பாடுகளும் இடம்பெறாது என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *