‘யானை’யின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னும் முடிவாகவில்லை! – ரணில் கூறுகின்றார்

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என்று அந்தக் கட்சியின் அமைச்சர்களால் கூறப்பட்டு வரும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய தேசிய முன்னணி தயாராகவுள்ளது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியா பின்னர்தான் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுப்போம்.

எமது அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சிலர் கருத்துக்களை வெளியிடுவார்கள். சில கறுப்பு ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்திகளையும் வெளியிடும்.

இவற்றைக் கண்டு நாம் அஞ்சமாட்டோம்; குழம்பமாட்டோம். எமது அணி – எமது கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கின்றது.

‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’யை முறியடித்த எமக்கு தேர்தலில் வெல்வது கடினமல்ல. ஜனாதிபதித் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ நடைபெற்றாலும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியே வெற்றிவாகை சூடும்.

ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாகப் பதிவு செய்யப்படும். ஜனநாயக தேசிய முன்னணியின் பெயரிலேயே நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் நாம் களமிறங்குவோம். எமது பங்காளிக் கட்சிகள் இதில் உறுதியாகவுள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *