கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! – மைத்திரி, சந்திரிகா நேருக்கு நேர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சம்பவம் இன்று (08) பதிவாகியது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவரான  எஸ். டபிள்யூ. ஆர்.டி.  பண்டாரநாயக்கவின் 120 ஆவது ஜனனதின  நிகழ்வு  காலிமுகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க நினைவு தூபிக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.

இதன்போது அமரர் பண்டாரநாயக்கவின் சிலைக்கு தற்போதைய சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

குறித்த நிகழ்வில் இவ்விருவரில் ஒருவரே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததால் சந்திரிகா அம்மையார் கடுப்பில் இருந்தார். மைத்திரியை மன்னிக்க மாட்டேன் எனவும் அறிவித்திருந்தார்.

எனினும்,  இன்றைய நிகழ்வில் இருவரும் பங்கேற்றனர். இருந்தாலும் இருவருக்குமிடையில் கருத்து பரிமாறல்கள் எதுவும் இடம்பெறவில்லை. மலர்மாலை அணிவித்த நிகழ்வுடன் ஜனாதிபதி உடனடியாக வெளியேறியுள்ளார்.

எனினும் குறித்த நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நீண்டநேரம் கலந்துரையாடியதை காணக்கூடியதாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *