மைத்திரி வருகையை முன்னிட்டே யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவு! – கொழும்பில் இருந்து உத்தரவு கிடைத்ததாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றமையால் அவரது பாதுகாப்புக்காரணங்களுக்காகக் கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கொலைச் சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர்கள், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். அவர் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் செல்வார். அங்கிருந்து அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இடம்பெறும் கிராம சக்தி திட்டம் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச – தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களைப் பொலிஸார் அவசர அவசரமாகத் திரட்டுகின்றனர்.

மேற்படி இடங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்களுக்கு நேற்று சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மைப் பொலிஸார் என அடையாளப்படுத்தி குடும்ப விவரங்களைக் கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பித் தருமாறு கோரிப் படிவங்களை நிரப்பி எடுத்துச் சென்றுள்ளனர்.

சில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை எனக் கூறப்பட்டபோது, வீட்டு உரிமையாளர் வந்ததும் இந்தப் படிவங்களை நிரப்பி நேற்று மாலைக்குள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறிச் சென்றுள்ளனர்.

இதவேளை, சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விவரங்களை கோருகின்றீர்கள் எனக் கேட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது எனவும், கொழும்பில் இருந்து இந்தப் படிவம் வந்தது, அவர்களின் உத்தரவின் பேரில்தான் தாம் விவரங்களைக் கோருகின்றோம் என சிவில் உடையில் தம்மைப் பொலிஸார் என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளனர்.

வீட்டு உரிமையார்களிடம் விவரம் சேகரிக்கக் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் குடியிருப்பாளர் விவர அட்டவணை – பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று என உள்ளது.

பொலிஸார் திடீரென நேற்றுச் சிவில் உடையில் குடும்ப விவரம் சேகரித்தமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையிலேயே ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டே இந்தப் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *