விக்கி எதிர் டெனீஸ் வழக்கு தீர்ப்பு 13இற்கு தள்ளிவைப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண முன்னாள் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரன் சார்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மீது தீர்ப்பு வழங்குவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதிக்குத் தள்ளிவைத்தது.

இந்த வழக்கில், பூர்வாங்க ஆட்சேபனை மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தீர்ப்பு வாசகங்கள் தயாராக இல்லாதமையால், தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதியரசர் ஜனக் டி சில்வா நேற்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து தம்மைப் பதவி விலக்கினர் எனக் கூறப்படுவது தவறு எனத் தெரிவித்து, அதனை நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் எனக் கோரி, டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு இடமளிக்குமாறு இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது.

ஆனால், அந்த உத்தரவை உதாசீனப்படுத்தியதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டனர் எனப் பின்னர் மற்றொரு வழக்கை டெனீஸ்வரன் தாக்கல் செய்தார்.

அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனத் தெரிவித்து விக்னேஸ்வரன் தரப்பினால் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்டது.

அது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அத்தீர்ப்பே 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயம், டெனீஸ்வரன் தாக்கல் செய்த மூலவழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 11 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறும் என நீதிமன்றம் நேற்றுத் தெரிவித்தது.

நேற்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரரான டெனீஸ்வரன், எதிர் மனுதாரர்களான சி.வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *