சர்வதேசத்திடம் தமிழர்கள் நீதி கேட்டு சுதந்திர தினத்தன்று போராட்டங்கள்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லாத இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறும் அனைத்துத் தரப்பிடமும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது வெளியிடப்பட்ட அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையிலும், உள்நாட்டு யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன. தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் வணக்க ஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில், சுதந்திரமான சுவாசக்காற்றைச் சுவாசிக்கத் தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டுவரும் நிலையில், யாருக்குச் சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்தச் சட்டம் யுத்தம் முடிந்தும் நீக்கப்படாமல் அமுலில் இருப்பதானது காலங்காலமாகத் தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்புச் செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன. இந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தம்.

இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கிப் பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள்.

இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சிக் கட்டமைப்பையும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்குக் கற்றுத்தந்துள்ளது. ஆதலால் வரலாற்றில் இருந்து நாம் பாடங் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கூட தூர நோக்கின்றி செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளால் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை தமிழ் இனத்தின் துர்ப்பாக்கிய நிலையே ஆகும்.

இனப்பிரச்சினையில் இலங்கையின் மெத்தனப் போக்கைச் சர்வதேசமும் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிந்தும் அதற்கான சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்காமல் கால அவகாசம் வழங்கிக் கொண்டிருப்பதாலும் சர்வதேசத்தின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று
கவலைகொள்ள வைக்கிறது.

இன நல்லிணக்கம் என்பதை வெற்று வார்த்தைகளால் உருவாக்கிட முடியாது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம் நோக்கி நகர முடியும்.

எனவேதான் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் இருக்கும் நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளாக ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக இது பிரித்தானிய காலனித்துவவாதிகளிடம் இருந்து சிங்கள தலைவர்களின் கைகளுக்கு இலங்கையின் அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட நாளே இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் – தமிழ் மக்களை மேலும் புதைகுழியினுள் தள்ளிய ஒரு நாள் என்பதனால் – நாம் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக அறிவிக்கின்றோம்.

அன்றைய தினம் மக்களின் குரலைச் சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி நீதி கேட்கும் முகமாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறு சிவில் சமூக அமைப்புகளையும், தமிழ் உணர்வாளர்களையும், இளைஞர்களையும் உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *