இந்திய மீனவர்கள் 9 பேர் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மீனவர்களைக் கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்தது.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை அன்றையதினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

அதனை அடுத்து மீனவர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 9 மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அதேவேளை , மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் படகுகளின் ஆவணங்களுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடமையாக்கப்படும் என நீதிவான் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *