மலையகத்தில் பழிவாங்கல் அரசியலை செய்யமாட்டோம் – இணைந்து பணியாற்ற தொண்டா அழைப்பு!

“ கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு, மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.


“ பழிவாங்கும் அரசியலை நான் முன்னெடுக்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு இழைக்கப்பட்ட அநீதிகளையே தற்போது நிவர்த்திசெய்துவருகின்றேன்” என்று அவர் கூறினார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர், அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றகையோடு மலையகத்தில் பழிவாங்கும் அரசியலை தொண்டமானும், அவரது சகாக்களும் முன்னெடுத்துவருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்தும், இ.தொ.காவின் அரசியல் எதிர்காலம் தொடர்பிலும் வினவியபோதே தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

“ மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஒருபோதும் மீறவில்லை. மக்களுக்காகவே அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன். எமது மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுதருவதாக புதிய பிரதமர் உறுதியளித்துள்ளார். இதன்காரணமாகவே எம்.பி.பதவியை துறக்கும் முடிவை ஒத்திவைத்தேன்.

மக்கள் எம் பக்கமே நிற்கின்றனர் என்பதை கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எமக்கு உணர்த்தின. எனவே, எம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் தவிடுபொடியாக்கும் வகையில் செயற்படமாட்டோம். மக்களுக்கான அரசியலையே நடத்திவந்தோம். இனியும் நடத்துவோம்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இதொகாவினர் பழிவாங்கப்பட்டனர். எமது ஸ்தாபகத் தலைவரைக்கூட விட்டுவைக்கவில்லை. அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குதான் நிவாரணம் வழங்கிவருகின்றேன். இது பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. அதேபோல், மக்களுக்காக முக்கிய திட்டங்கள் வரும்போது இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வரவேண்டும். அதற்கு வடிவேல் சுரேஸ் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *