கொழும்பில் திரண்ட மக்கள் படையால் அதிர்ச்சியில் உறைந்தது ராஜபக்ஷ அணி! – இரவோடிரவாக சகாக்களுடன் மஹிந்த பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டக் கோரியும் ஐ.தே.கவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரண்டு ரணிலின் கரங்களைப் பலப்படுத்தியையடுத்து மைத்திரி – மஹிந்த அணியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

முன்னதாக, அரச கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடைவிதித்தும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றத் தடை உத்தரவைப் பொலிஸ் பெற்றிருந்தது.

அத்துடன், பொலிஸார் 2000 பேரும், விசேட அதிரடிப் படையின் 10 அணிகளும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் நீர்ப்பீரங்கி வாகனங்களும் ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், எதிர்பார்க்கப்பட்டதைவிட பெரும் தொகையான ஐ.தே.க. ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் அணிதிரண்டதையடுத்து மைத்திரி – மஹிந்த அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து தனது சகாக்களுடன் மஹிந்த நேற்றிரவு கலந்துரையாடியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ எம்.பி., “மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கு ஐ.தே.க. ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோருக்கின்றோம். சர்வதிகார ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷ, 2015ஆம் நாடு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாடு மக்களினால் தோற்கடிக்கப்பட்டார். அப்படியான ஒருவரை தற்போது திருட்டுத்தனமாக பிரதமராக்கிய மைத்திரியை நாம் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்” – என்றார்.

பிரதமர் பதவியில் மஹிந்த சட்டவிரோதமாக இருப்பது அவருக்கே வெட்கக்கேடு எனவும், உடன் அவர் பதவியைத் துறந்து கெளரவமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. மேலும் கூறினார்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாடம் கற்பிப்பது ஐ.தே.கவுக்குக் கடினமான வேலையில்லை என்று சரத் பொன்சேகா எம்.பி. தனது உரையில் தெரிவித்தார்.

மைத்திரி – மஹிந்தவின் போலியான அரசு தொடர்ந்தால், சர்வதேச சமூகத்தின் பொருளாதார தடை மற்றும் ஏனைய தடைகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *