நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை! – தீர்வு யோசனைகள் குறித்த சகல ஆவணங்களும் இரு தொகுதிகளாக எம்.பிக்களுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசமைப்புப் பேரவையாகக் கூடுகின்றது.

புதியஅரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு தொகுதிகளாக அரசமைப்புப் பேரவை உறுப்பினர்களான சகல எம்.பிக்களுக்கும் நாளை கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரதமரும் வழிகாட்டல் குழுத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் அந்த இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் (அரசமைப்புப் பேரவையில்) இடம்பெற்ற விவாதங்களின்போது பல்வேறு கட்சிகளினதும் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வுக்கான யோசனைத் திட்ட வடிவம் ஒன்றை நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளது.

அந்த யோசனை வடிவமும் நாளை அரசமைப்பு சபையில் சமர்ப்பித்து உறுப்பினர்களுக்குக் கையளிக்கப்படும்.

இரண்டு தொகுதி ஆவணங்களில் இந்த யோசனை வடிவமும் உள்ளடங்கியிருக்கும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை காலை 10 மணிக்குக் கூடும் அரசமைப்புச் சபை தேவைப்பட்டால் நண்பகல் 12.30 வரை தனது அமர்வை நீடிக்கும். அச்சமயம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து பூர்வாங்க பரிசீலனை நடைபெறும் என்றும், அந்த ஆவணங்களை உறுப்பினர்கள் விரிவாக ஆராய்ந்த பின்னர் அந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக அரசமைப்புச் சபை பிறிதொரு தினத்தில் அல்லது தினங்களில் கூடும் என்றும், அந்த விவாதங்களின் அடிப்படையிலேயே, தற்போது நிபுணர்குழு சமர்ப்பித்துள்ள தீர்வு யோசனைக்கான திட்ட வடிவை, புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான விவாதத்துக்குரிய நகல் வடிவமாக ஏற்கலாமா அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்தபின் அதனை நகல் வடிவமாக பரிசீலனைக்கு எடுக்கலாமா என்பது குறித்தெல்லாம் தீர்மானிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நேற்று நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் அரசமைப்புப் பேரவையை இன்றைய சூழலில்
உடனடியாகக் கூட்டுக்கின்றமையை தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் எதிர்த்தனர். மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர் வரவேற்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் இந்த நகர்வு முயற்சி சாத்தியமானதல்ல என்று ஜே.வி.பியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *