தெற்கு அரசியலை பரபரப்பாக்கப்போகும் ‘மாலைத் தீர்ப்பு’! எம்.பிக்களை கொழும்பில் முகாமிடுமாறு ரணில் பணிப்பு!! – மைத்திரியும் மஹிந்தவும் அவசர ஆலோசனை

நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை வெளியான பின்னர் இரவோடிரவாக தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்வதற்குரிய அறிகுறிகள் பிரகாசமாகத் தென்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து எம்.பிக்களையும் கொழும்பில் முகாமிடுமாறு கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு நேற்று முடிவடைந்த பின்னர் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற எம்.பிக்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தயாராகவிருந்த எம்.பிக்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அலரிமாளிகையில் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ‘அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள்’ சம்பந்தமாக தனது ஆலோசகர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றார் என்றும், இன்று மாலை தமது அணியைச் சார்ந்த எம்.பிக்களை சந்திக்கவுள்ளார் என்றும் தெரியவருகின்றது. மறுபுறத்தில் மஹிந்த தலைமையிலும் பேச்சுகள் இடம்பெறவுள்ளன.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தை நோக்கி அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் படையயெடுத்த வண்ணமுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *