தப்தர் ஜெய்லானி மலைக்குகைப் பள்ளிவாசலின் வரலாற்றுப் பின்னணி!

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து 22கிலோமீற்றர் தூரத்தில் தப்தர் ஜெய்லானி அமைந்துள்ளது. தப்தர் ஜெய்லானி மலையானது காலியிலிருந்து இரத்தினபுரி ஊடாக பாவாதமலைக்குச் செல்லப்பயன்படுத்தப்பட்ட பண்டையகாலப் பாதையில் அமைந்துள்ளது. இவ்விடம் கூரகல என்றும் அழைக்கப்படுகின்றது. தப்தர் ஜெய்லானியில் அமைந்துள்ள மலைக்குகைப் பள்ளிவாசலானது கடல் மட்டத்திலிருந்து 1000அடி உயரத்தில் அமைந்துள்ளது. காடுகளால் சூழப்பட்ட இந்த இடத்திலேயே இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மிகச்சிறந்த ஆத்மஞானியாக அறியப்படும் செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இறைத்தியானத்தில் ஈடுபட்டதாக வரலாற்றுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்தர் ஜெய்லானியைப் பற்றிய பரந்த ஆய்வொன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் பேராசிரியர் Dennis B. McGilvray அவர்கள் தனது ஆய்வை Jailani : A Sufi Shrine in Srilanka என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளார். இவ் ஆய்வுக்கட்டுரையில் தப்தர் ஜெய்லானி பற்றிய பல அறியதகவல்களை அவர் பதிவுசெய்துள்ளார்.

இலங்கைக்கு மத்தியகிழக்கிலிருந்து ஆதிகாலந்தொட்டு அரேபியர்களின் வருகை தந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கை பற்றி கி.மு.300 காலப்பகுதியில் அரேபியர்கள் அறிந்திருந்தாகவும், அக்காலப் பகுதியிலிருந்து அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் எனவும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கிலிருந்து வருகைதந்த அரபிகள் மத்தியில், பாவாதமலை பிரசித்திபெற்று காணப்படதற்கான ஆதாரங்கள் அவர்களின் வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இஸ்லாத்தில் முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி புனித அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தப்ஸீர் பைதாவி மற்றும் தப்ஸீர் காஸின் போன்ற புனித அல்-குர்ஆன் விளக்கவுரைகளில், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோண்றல்கள் செரந்திப்பில் ‘நூத்’என்ற மலையில் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. செரந்திப் என்பது பண்டைய அரேபியர்களால் இலங்கை அழைக்கப்பட்ட பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கிழைத்தேயவாதியான Sir William Ouseley அவர்கள், தனது பயணத்தின் போது பிர்கன் கத்தியா என்ற பாரசீக கையெழுத்துப்பிரதியை மேற்கோள்காட்டி, ‘செரந்திபானது சுவர்கத்தில் இருந்து ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்தோண்றல் இறக்கப்பட்ட மலையைக் குறித்து கொண்டாடப்படுகின்றது’ எனக் குறிப்பிடுகின்றார்.

புகழ்பெற்ற நாடுகாண் பயணியான மோரோக்கோவைச் சேர்ந்த இப்னு பதூதா அவர்கள் கி.பி. 1344இல் பாவதமலையை தரிசித்தார். மேலும், தனது பயணக்குறிப்பு புத்தகத்தில் பாவாதமலைக்குச் செல்லும் வழியில் தான் பல புகழ்பெற்ற முஸ்லிம்களின் கப்ருகளைக் கண்டதாக குறிப்பிடுகின்றார். பாவதமலைக்குச் செல்லும் வழியில் சில இடங்களில் முஸ்லிம் துறவி ஒருவர் இருந்ததாகவும், அவர்கள் இருக்கும் இடங்களில் யாத்திரீகர்களுக்கு ஓய்வு எடுத்துச்செல்லக்கூடிய மாடங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இப்னு பதூதா தனது பயணக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1344 இல் பாவதமலையைத் தரிசிப்பதற்கு கூரகல (தப்தர் ஜெய்லானி)இன் ஊடாகச் செல்லும் பாதையினையே இப்னு பதூதா பாவித்தார். இப்னு பதூதா பயணித்த பாதையை விளக்கும் படம் A. Denis N Fernando இன் இலங்கைப்பட வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட வரைபானது முன்னால் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான M.L.M. Aboosally அவர்களால் எழுதப்பட்ட Dafthar Jailany – A Historical Account of the Dafthar Jailany Rock Cave Mosque என்ற ஆய்வுநூலில் அச்சிடப்பட்டுள்ளது.

பாவதமலைக்குச் செல்கின்ற பண்டைய பாதை கூரகலயினூடாக அமைந்திருந்ததால் அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தப்தர் ஜெய்லானியை தரிசிப்பதற்கும் சாத்தியமாக அமைந்திருக்கின்றது. அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தென்னிந்தியாவின், கீழக்கரையில் 40நாட்கள் இறைத்தியானத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் இலங்கைக்கு வந்து பாவாதமலையைத் தரிசித்ததாகவும், திரும்பும் வழியில தப்தர் ஜெய்லானியைத் தரிசித்தாகவும், இந்தியாவின் தமிழ்நாட்டில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவரும் அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிஞருமான Susan Schoemburg அவர்கள் குறிப்பிடுகின்றார். எனவே, அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூரகல தப்தர் ஜெய்லானியைத் தரிசித்தது, அவர்களின் இந்திய துணைக்கண்டத்திற்கான விஜயத்துடன் ஒத்துப்போவதை எமக்கு அவதானிக்க முடியும்.

கூரகல மற்றும் ஹிகுரங்கல என்பன பலாங்கொடை பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு மலைகளாகும். பொதுவாக இந்த இரண்டு மலைகளுமேயே தப்தர் ஜெய்லானி என அழைக்கப்படுகின்றது. காலியிலிருந்து இரத்தினபுரியூடாக பாவதமலைக்குச் செல்கின்ற பண்டைய பாதையிலேயே இந்த மலை அமைந்துள்ளது. இங்கு காணப்படுகின்ற பாறை செதுக்கல்கள், அரபியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துக்கள், மீஸான் கற்கள் என்பன அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது வாழ்வின் இறைத்தியானத்தின் ஒரு பகுதியை இங்கு கழித்தற்கான ஆதாரமாக நம்பப்படுகின்றது. அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் முதலில் பாவாதமலையைத் தரிசிக்க வந்ததது பற்றியும், அதன் பின்னர் தப்தர் ஜெய்லானியில் 12வருடங்கள் இறைத்தியானத்தில் ஈடுபட்டது பற்றியும் விரிவான தகவல்கள் சதுரங்க சங்கரம் என்ற புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

1914ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய R.N. Thaine அவர்கள் தனது உத்தியோகபூர்வ நாட்குறிப்பில் ‘இந்த மலையானது தஸ்துர் அல்லது தக்மா என்ற முஹம்மதியர்களின் பெயரால் அறியப்படுவதாக விளங்கிக்கொண்டேன். மேலும், முஹியித்தீன் அப்துல் காதிர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இங்கேயே சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை தேடினார். ஒருநாள் தனது கையை அந்த மலையில் வைத்ததுடன் வழி திறக்கப்பட்டது. பின்னர், அவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த மலை மூடிக்கொண்டது. அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை. இங்கு வரும் யாத்திரீகர்கள் இந்த மலையைத் தரிசித்துச் செல்கின்றனர்.’ எனக் குறிப்பிடுகின்றார்.

தப்தர் ஜெய்லானிக்கும், அப்துல் காதிர் ஜெய்லானி(றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கும் இடையிலான தொடர்புக்கு மேலதிகமாக ஆதாரமாக 1922ஆம் ஆண்டு கூரகலயில் பள்ளிவாசல் கட்டுவதற்காக வேலைகளை ஆரம்பிக்கும்போது, மக்பரா ஒன்றின் மீதிருந்த மீஸான் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ‘தர்வேஷ் முஹியித்தீன்’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்ததுடன், அதில் ஹிஜ்ரி 715 (அதாவது கி.பி. 1322) என்ற ஆண்டும் பதிக்கப்பட்டிருந்து. ‘தர்வேஷ் முஹியித்தீன்’ என்பது ‘முஹியித்தீனின் சீடர்’ என்பதைக் குறிக்கும். ஹிஜ்ரி 715 என்பது அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வபாத்தின் பின்னர் 154வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தப்தர் ஜெய்லானிக்கும், அப்துல் காதிர் ஜெய்லானி(றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கும் மிகநெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும் என்பதை ஊகிக்கலாம். அதாவது, செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பைச் சேர்ந்த அவரது சீடர் ஒருவரே தப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்து, அங்கு வபாத்தாகி அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என நம்பப்படுகின்றது.

1922ஆம் ஆண்டு ஹிதுவங்கல மலையின் மீது சிறிய பள்ளிவாசலொன்று கட்டப்பட்டது. பள்ளிவாசலுக்கு கூரையில்லை. ஏனெனில், மலையானது நாகப்பம்பின் வளைந்த தலைவடிவில் காணப்படுவதால், அது பள்ளிவாசலின் கூரையாக இருக்கின்றது. அங்கு அரபு மொழியில் எழுதப்பட்ட பல எழுத்துக்கள் காணப்படுவதோடு, கஹ்பாவின் திசையைக் காட்டுவதற்கு மிஹ்ரபாப் வடிவம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது.

இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயரின் ஆளுகைக்கு உட்பட்டதன் பின்னர், இலங்கைக்கும் மத்திய கிழக்கின் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையிலான தொடர்பு முற்றாக பாதிப்படைந்தது. எனவே, காலியிலிருந்து இரத்தினபுரி கூரகல ஊடாக பாவாதமலைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பாதை சில நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டதோடு, தப்தர் ஜெய்லானியும் கைவிடப்பட்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிவரை, தப்தர் ஜெய்லானியைச் சுற்றியும், தூரத்திலிருந்த பலாங்கொடைப் பகுதிகளுக்கிடையேயும் முஸ்லிம் குடியேற்றங்கள் இருக்கவில்லை. 1850ஆம் ஆண்டு வரை தப்தர் ஜெய்லானி பெயரளவில் மாத்திரமே அறியப்பட்டிருந்தது. மேலும், தப்தர் ஜெய்லானியைச் சுற்றிய பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தோடு அங்கு யானை போன்ற காட்டு மிருகங்கள் இருந்தன.

செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தரிசித்த இடம் என்று தென்னிந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தப்தர் ஜெய்லானியை அறிந்து வைத்திருந்தனர். இதன் அடிப்படையில், செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இறைத்தியானத்தில் ஈடுபட்ட இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவின் கேரளாவின் இலட்சத் தீவினைச் சேரந்த மௌலானா செய்யித் முஸ்தபா செய்யித் அப்துல் ரஹ்மான் இப்னு ஐதரூஸியதுல் ஹாசிமி அவர்கள் பலாங்கொடை நகருக்கு 1875ஆம் ஆண்டு வருகை தந்தார். மக்களால் மறக்கப்பட்டிருந்த தப்தர் ஜெய்லானியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்ச்சிகளை மேற்கொண்டார். இதற்காக பலாங்கொடை முஸ்லிம் சமூகத்தின் தலைவராக இருந்த சின்ன லெப்பை காஸிம் லெப்பை அவர்களிடம் உதவி கோரினார். எனினும், அந்த இடம் பற்றி தற்போது அறிந்த ஒருவரும் இல்லை என அவர்கள் பதிலளித்தார்.

தமது முயற்சியைக் கைவிடாமல் மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள், அங்கிருந்த சிங்கள மக்களிடமும் உதவியைப் பெற்றார். எனவே, பலாங்கொடையிலிருந்து கால்நடையாகச் சென்று தப்தர் ஜெய்லானியை கண்டுபிடிப்பதற்கு ஒரு குழுவை மௌலானா அவர்கள் தயார் செய்தார்கள். இந்தக் குழுவினர் பலாங்கொடையிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள போவத்தை கிராம் வரை கால்நடையாகச் சென்றது. போவத்தையுடன் பாதை முடிவுற்றிருந்தது. மேலும், அதைத்தாண்டிய பகுதி காட்டுப பிரதேசமாகக் காணப்பட்டது. பின்னர், அங்கிருந்து காடுவழியாகச் சென்ற அவர்கள் இறுதியில் கித்துவங்கல மலைப் பகுதியை அடைந்தனர். கித்துவங்கல மலைக்குகைப் பகுதியில் செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்கள் தரிசித்த இடத்தையும், முஸ்லிம்கள் தொழுகைக்குப் பயன்படுத்திய இடத்தையும் மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள் கண்டுபிடித்தார். மேலும், கைப்பதிப்பு அடையாளங்கள் மற்றும் அரபு மொழியால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் மலையின் மீதிருந்ததை மௌலானா அவர்கள் கண்டுபிடித்தார். அதன் பின்னர் சில காலம் தனது சகாக்களுடன் மௌலானா அவர்கள் அங்கு தங்கியிருந்தார். மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள் தப்தர் ஜெய்லானியை கண்டுபிடிக்கச் சென்ற நிகழ்வு பற்றி இரத்தினபுரி மாவட்டத்தின் 1857ஆம் அண்டுக்குரிய கச்சேரி நாட்குறிப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புனித இஸ்லாத்தை கற்றுத்தேர்ந்த அறிஞராக இருந்த மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அப்பகுதி முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்றுமதத்தினரும் மரியாதை செலுத்தி வந்தனர். தப்தர் ஜெய்லானிக்கு அடிக்கடி விஜயம் செய்த மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள், பலாங்கெடையில் திருமணம் செய்து அங்கேயே தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார். 1908ஆம் ஆண்டு வபாத்தான மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள் தப்தர் ஜெய்லானிக்குச் செல்லும் பாதையில் அடக்கம் செய்யப்பட்டதுடன், அவர்களின் மக்பரா பாவா ஸியாரம் என அழைக்கப்படுகின்றது.

தப்தர் ஜெய்லானி மீளக் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இடத்தில் நாளாந்த சமய நிகழ்வுகளை மௌலானா அப்துல் ரஹ்மான் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அதன் அடிப்படையில், 1890ஆம் ஆண்டு மெலானா அப்துல் ரஹ்மான் அவர்கள் ரபீய்யுல் ஆகிர் மாதத்தில் மௌலீத் நிகழ்வினை ஏற்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை 100 வருடங்களுக்கு மேலாக மௌலீத் நிகழ்ச்சி நடைபெற்றுவருகின்றது. 1898ஆம் ஆண்டு மௌலீத் நிகழ்ச்சிக்கு மௌலானா அப்துல் ரஹ்மான் மற்றும் ஏனைய முஹம்மதியர்களால் தாம் அங்குள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் புனித இடத்திற்கு அழைக்கப்பட்டதாக அப்போதிருந்த இரத்தினபுரி மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தனது கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்க வேண்டியதாகும். மேலும், 1857ஆம் ஆண்டு முதல் 1935ஆம் ஆண்டு வரை இரத்தினபுரி மாவட்டத்தின் அரசாங்க அதிபர்களாக கடமையாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளின் தமது கச்சேரி நாட்குறிப்பில் , தப்தர் ஜெய்லானியானது முஸ்லிம்களின் ஒரு வழிபாட்டுத்தளமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 1921 மற்றும் 1928ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட இலங்கைப் வரைபடத்தில் கூரகல, ‘முஹம்மதியர்களின் கல்லறை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், 1971ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட இலங்கை வரைபடத்தில் ‘முஹம்மதியர்களின் கல்லறை’ என்பது நீக்கப்பட்டிருந்தது. அவ்விடம் பௌத்த மாடம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இருந்த ஒரேயொரு ஆதாரம் அங்கு தொல்பொருளியல் திணைக்களத்தால் வைக்கப்பட்டிருந்த அடையாளப் பலகை (Sign Board) மாத்திரமேயாகும். தப்தர் ஜெய்லானி மீள கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலர் வருகைதந்தும், வருகைதந்து கொண்டும் இருக்கின்றனர்.

கூரகல பௌத்தர்களுக்கு உரிமையான பூமி என்ற வாதம் முதன்முதலில் 1960ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. கலாச்சார மற்றும் தொல்பொருளியல் அமைச்சின் செயலாளராக கலாநிதி நிஸங்க விஜேனரத்ன இருக்கும் காலப்பகுதியில் அங்கு தாதுகோபுரம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு இரண்டு அடி உயரமான தாதுகோபுரம் ஒன்று தொல்பொருளியல் திணைக்களத்தால் கூரகலயில் கட்டப்பட்டது. இத்தாது கோபுரம் 2000 வருடங்கள் பழமையானது என்ற வாதம் பிறகு அவர்களால் முன்வைக்கப்பட்டு, அதன்மூலம் அந்த இடம் பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க அவர்களால் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அத்தாது கோபுரம் யாழ்ப்பாணம், கங்கேசந்துறை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெந்தினாலும், உள்நாட்டு செங்கல்லினாலும் கட்டப்பட்டது என்று பின்னர் நிரூபணமானது. அதன்பின்னர், அமைச்சரவை உத்தரவின் பிரகாரம் அத்தாது கோபுரத்தின் கட்டுமாணப் பணிகள் இரண்டு அடி உயரத்துடன் நிறுத்தப்பட்டது.

1971ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் பின்னரே பள்ளிவாசல் மற்றும் மலைக்குகைப் பகுதி தொல்பொருள் இருப்பிற்குரிய பிரதேசம் என்று பிரகடணப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அந்த இடத்தில் பண்டைய பௌத்த மாடம் என்று அமைந்திருந்தது என்று கூறி, அடையாளப் பலகையொன்று (Sign Board) வைக்கப்பட்டது. மேலும், அக்காலப் பகுதியில் பலாங்கொடை விகாரைகளில் இருந்த 80இற்கும் அதிகமான பிக்குகள் கூரகல தப்தர் ஜெய்லானிக்கும், அங்கு பல்லாண்டு காலமாக நடைபெற்றுவந்த நிகழ்வுகளுக்கும் எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை, இரத்தினபுரியைச் சேர்ந்த பௌத்த மதகுருவான கிரியல்ல கனனவிமல தேரர் அவர்கள் 1971ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி ‘தவச’ பத்திரிகையில் கூரகல பற்றி ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர்கள் குறிப்பிடும் போது, தாம் தப்தர் ஜெய்லானிக்கு ஐந்து தடவைகள் வந்ததாகவும், இதன் போது அங்கு தொல்பொருளியல் பிரதி ஆணையாளர் சால்ஸ் கொடகம்புர அவர்களோடு விரிவான ஆய்வுகளில் ஈடுபட்டதாகவும், ஆனால் அங்கு எந்தவொரு பௌத்த இடிபாடுகளோ, சுவடுகளோ தமக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள தாதுகோபுரம் தொல்பொருளியல் திணைக்களத்தால் கட்டப்பட்டது என்பதற்கு இது முக்கியமான ஓர் ஆதாரமாகும்.

1972ஆம் ஆண்டு அமைச்சரவை உத்தரவின் பேரில், தாதுகோபுரத்தின் கட்டுமாணப் பணிகள் நிறுத்தப்பட்டதன் பின்னர், கூரகல முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது என்று மும்மொழிகளிலும் தொல்பொருளியல் ஆணையாளரால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதன் பின்னர், 1973ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதி ‘அகழ்வு நடவடிக்கைகளால் வழிபாடுகள் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது’ என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. அமைச்சரவை தீர்மானத்திற்குப் பின்னர் தப்தர் ஜெய்லானி தொடர்பில் இரு தரப்பினருக்கும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ‘அனைவரும் இந்தமுறை வெசாக்கை கூரகலயில் கொண்டாட தயாராகுங்கள்’ என்ற பேச்சைத் தொடரந்து, தீவிர தேசிவாதக் கட்சியான ஜாதிக ஹெல உருமய கூரகலக்குச் சென்று, இது பௌத்தர்களுக்குச் சொந்தமான பூமி என்ற வாதத்திற்கு பின்னர் மீண்டும் பதட்டமான சூழல் உருவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *