ஜனாதிபதிக்கு அங்கொடையில் உளநலப் பரிசோதனை! நீதிமன்றில் மனு!! – மஹிந்த அணி கொதிப்பு!!

அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்து புதியதொரு சவால் எழுந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உளநிலை தொடர்பாக கேள்வி எழுப்பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்சிலா ஜெயவர்த்தன என்ற பெண் செயற்பாட்டாளர் ஒருவரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சட்டவாளர் சிசிர குமார சிறிவர்த்தன,

“அவர் நல்ல உள நிலையில் இருக்கிறாரா என்று அங்கொடை மனநல மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து பரிசோதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா எழுதிய, ஜனாதிபதி தந்தை என்ற நூலில், குடும்பத்தில் உள்ள மன நலமின்மை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

அவரது அண்மைய சர்ச்சைக்குரிய செயற்பாடுகள், அறிக்கைகள் அதற்கு விளக்கமளிக்கக் கூடும்” என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “நாட்டின் முதல் பிரஜையை அவமதிக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என்று மஹிந்த அணி விமர்சித்து வருகின்றது.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனநோயாளி – பைத்தியக்காரர் எனவும், அவருக்கு உளநலப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *