சர்ச்சைக்குரிய குருணாகல் வைத்தியர் மேலதிக விசாரணைக்காக சி.ஐ.டியிடம்!

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வைத்தியர் 4000 சிங்களப் பெண்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தார் எனத் ‘திவயின’ பத்திரிகை முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பின்னர், குறித்த வைத்தியரிடம் குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, 8000 பெண்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை புரிந்தமையை அவர் ஒப்புக்கொண்டார் எனத் ‘திவயின’ இன்று (25) இரண்டாவது செய்தியையும் வெளியிட்டிருந்தது.

குறித்த வைத்தியர் சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை, வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாகப் பெருமளவில் பணம் ஈட்டியுள்ளார் எனப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், குறித்த வைத்தியர் நேற்றிரவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே அவர் கைதானார் என்று பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே, அவர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *