இலங்கையின் நீதித்துறையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு! – சீறிப் பாய்கின்றது மஹிந்த அணி

நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மஹிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,

“திருகோணமலையில் உள்ள காணிகளை அமெரிக்காவுக்கு வழங்க ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருந்தார்.

அதனால் தான், சில அனைத்துலக நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ளன” – என்று கூறினார்.

அதேவேளை, இதே செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா,

“கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரகங்களினதும், அனைத்துலக அமைப்புகளினதும், குறிப்பிட்ட சில பிரதிநிதிகள் உயர்நீதிமன்ற விசாரணையின்போது பிரசன்னமாகியிருந்தனர். இது கவலைக்குரியது.

இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்றிருந்த வெளிநாட்டடவர்கள் சிலர் நிலைமைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாட்டின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு உரிமையில்லை.

எமது நீதித்துறை நியாயமான முடிவை அறிவிக்கவுள்ள நிலையில், அவர்கள் அது பற்றிக் கருத்து வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும்.

பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் வெளியிட்ட கருத்தும் கவலைக்குரியது. அவர் தேவையின்றி இலங்கையின் நீதித்துறை மற்றும் இறைமையில் தலையீடு செய்கின்றார்.

அனைத்துலக சமூகமும், இராஜதந்திர தூதரகங்களும், உள்ளூர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க விரும்புகின்றன. நீதித்துறையிலும் சில தரப்புகள் தலையீடு செய்ய எத்தனிக்கின்றன.

இலங்கையின் அரசமைப்பானது, அமெரிக்கா மற்றும் பிரான்சின் அரசமைப்புகளின் கலவையாகும்.

இலங்கையின் அரசமைப்பு தனித்துவமானது. அதனை இந்தியாவின் அரசமைப்புடனோ அல்லது வேறோரு நாட்டினது அரசமைப்புடனோ ஒப்பீடு செய்ய முடியாது.

எமது அரசமைப்பின் படி, ஜனாதிபதி தான் நாட்டின் தலைவர். அமைச்சரவையின் தலைவர். ஆயுதப்படைகளின் தலைவர்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *