தேர்தல் வரட்டும் – நான் யார் என்பதை நிரூபிக்கின்றேன்! மஹிந்த சபதம்!!

” மஹிந்த ராஜபக்ச என்றால் யார், அவருக்கான  பலம் என்னவென்பதை அடுத்த தேர்தலில் நிரூபித்துக்காட்டுவேன். நம்பவைத்து கழுத்தறுப்புசெய்த சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரின் அரசியல் பயணத்துக்கும் முடிவு கட்டுவேன்.”

இவ்வாறு பொங்கியெழுந்து கடும்சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார் பிரதமர்  மஹிந்த ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய  தேசிய முன்னணி தயாராகிவருவதால், பதவிதுறக்கவேண்டிய நிலை மஹிந்தவுக்கும், அவரின் சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒருமாதத்துக்கு மேலாக இடம்பெற்றுவரும் அரசியல் சமரிலிருந்து இறுதிநேரத்தில் மஹிந்தவுக்கு பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதானது அவரது அரசியல் பயணத்தில் பாரிய சரிவாக பார்க்கப்படுகின்றது.

மைத்திரியுடன் இணைந்து பிரதமர் பதவியை ஏற்காது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையேற்று மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால் 65 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றிருக்கலாம். அடுத்து நடைபெறும்  தேசிய மட்டத்திலான  தேர்தல்களிலும் வெற்றிவாகை  சூடியிருக்கலாம் என மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் அவரை நேரில் சந்தித்து குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கடுப்பாகிய மஹிந்த,

” பெரும்பான்மை இருக்கின்றது என சுதந்திரக்கட்சி தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டது.  நான்  பதவிவேற்றால்தான் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்பு  ஐ.தே.கவைவிட்டு வெளியேவரும்  எனவும் கூறப்பட்டது. அதுமட்டுமல்ல நெருக்கடியில் இருந்து  நாட்டை மீட்டெடுக்கும் நல்ல எண்ணத்துடனும்தான் நான் முடிவொன்றை எடுத்தேன்.

எதுஎப்படியோ நீதிமன்றமுடிவு பாதகமாக  அமைந்தால்,  மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படவேண்டும். அதற்குரிய  அழுத்தங்களை நான்  நேரில்  இறங்கி  கொடுப்பேன். பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலும்  பரவாயில்லை. மஹிந்த என்றால் யார் என்பதை சிலருக்கு புரியவைக்கவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றக்கட்டத்தொகுதியில் நேற்று சந்தித்த மஹிந்த ராஜபக்ச, பிரச்சினையை யார் உருவாக்கினார்களோ அவரையே தீர்க்க சொல்லுங்கள். தேர்தல் வரட்டும். நான் பதிலடி கொடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *