மாலைதீவு ஜனாதிபதி கொலை முயற்சி – இலங்கை இளைஞரை மீட்டெடுக்க பைசர் களத்தில்!

மாலை தீவு  சிறையில் உள்ள லஹிரு மதுசான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.


மாலை தீவின் புதிய ஜனாதிபதியாக இப்றாஹீம் மொஹமட் சொலிஹ்வின்  பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16)  வெள்ளிக்கிழமை  மாலைதீவுக்குச்  சென்றவேளையிலேயே அமைச்சர் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான லஹிரு மதுசான் (27 வயது) எனும் இவ்விளைஞர், மாலை தீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக  சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ்  யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூன்று வருட  கால கட்டத்திற்குள்,  சிறையில் எதுவித  பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாத நிலையில், லஹிரு மதுசான் மாலை தீவில் சிறைவாசம் அனுபவித்து வருவது  குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின்  விசேட பிரதி நிதியாக,  மாலை தீவு சென்றுள்ள அமைச்சர் இவரை விடுதலை செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அவசரமாக இறங்கியுள்ளார்.இது தொடர்பில் புதிதாகப் பதவியேற்ற மாலை தீவு ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமட் சொலிஹ்வுடனும், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடனும் அமைச்சர் மாலை தீவில் வைத்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இவர் ஒரு அப்பாவி என்றும், இவ்வாறான நடவடிக்கைகளில் இவருக்கு ஈடுபடுவதற்குத் தேவையான எந்தவித அவசியமும் கிடையாது. அத்துடன்,  இவருக்கும் இந்த விவகாரத்துக்கும் இடையில் எவ்வித  தொடர்புகளும் கிடையாது  என்றும், அமைச்சர் இதன்போது முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகளிடம் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று லஹிரு மதுசானையும் நேரடியாகச் சந்தித்து,  அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக்  கூறினார். அவரை மிக அவசரமாக விடுதலை செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதாகவும் அமைச்சர் இதன்போது லஹிருவிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
தான் ஒரு முஸ்லிம் அமை ச்சராக இருந்தாலும் கூட, இலங்கை மக்கள்  எந்த மதமாக இருந்தாலும், “இலங்கையர்” என்ற உரிமையுடன்  அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு,  அவர்களை அனுசரிப்பதே தனது கொள்கையாகும் என்றும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எந்தவித குற்ற உணர்ச்சியுமற்ற லஹிரு மதுசானை, சிறையிலிருந்து விடுவித்து,  அவரை அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும்  குடும்ப உறவுகளோடு   மீண்டும் இணைப்பதே தனது நோக்கமெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்கள்  இன, மத, மொழி பேதங்களின்றி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு வருவதையிட்டு, தான் இச்சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிமான அமைச்சர் ஒருவர், பெளத்த மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விடுதலைக்காக, இவ்வாறான  முயற்சிகளை மேற்கொள்வது என்பது, இன்றைய கால கட்டத்தில் மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு சிறந்த கைங்கரியமாகும். அத்துடன், சமூக ஒற்றுமையை  முன்னுதாரணமாக எடுத்துக்காட்டும் விடயமாகவும் இது அமைந்துள்ளதுடன், இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகுமெனவும், பல அறிவுதுறை சார்ந்தவர்களும், நலன்விரும்பிகளும்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று மாலை தீவு சென்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா, திங்கட்கிழமை இரவு, மீண்டும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *