ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் – இளம் பெண்கள் சபதம்!

ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் என்று சபரிமலைக்குச் செல்ல கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்ட 3 இளம்பெண்கள் கூறினர்.

ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் என்று சபரிமலைக்குச் செல்ல கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்ட 3 இளம்பெண்கள் கூறினர்.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவிலின் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று ஐயப்ப பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. இனி மண்டல பூஜை நடக்கும் டிசம்பர் 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த கால கட்டத்தில் கோவிலுக்குச் செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

இதனால் சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என போலீசார் கருதினர். எனவே சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். போலீஸ் தடையையும் மீறி சபரிமலையில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சபரிமலைக்கு வந்த புனேவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் பீதிக்கு ஆளான பெண்கள் பலரும் இதுவரை சபரிமலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், அனிலா, கொல்லத்தைச் சேர்ந்த தன்யா ஆகிய 3 பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று நாங்கள் 3 பேரும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளோம். இந்த தகவல் வெளியானதும் எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. வெளியில் நடமாடவும் பயமாக இருக்கிறது.

ஆனால் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. எனவே சபரிமலைக்குச் செல்ல அரசாங்கம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களால் இப்போது எங்களால் அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் நிலை வர வேண்டும். அப்படி வந்தால் அது எதிர்கால பெண்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.

இப்போது கோவிலுக்குச் செல்ல அணிந்துள்ள மாலையை கோவிலுக்கு சென்ற பின்பு தான் அகற்றுவோம். அதுவரை மாலையை கழற்ற மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *