‘விடுதலைப்புலிகளுக்காக ஒலித்த குரல்’ விஜயகலா மீண்டும் அமைச்சரானார்!

`விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்’ எனப் பேசிய விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

ஏற்கனவே சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த விஜயகலா, கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் யாழ். பகுதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது நாங்கள் உணருகின்றோம். ஆனால், இப்போதோ, இங்கு பாலியல் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாங்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தோம்? ஜனாதிபதி இப்போது கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றாரே தவிர, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதில்லை. நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், எங்களது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்தவரே விடுதலைப்புலிகளை இவ்வாறு ஆதரித்துப் பேசியமை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மஹிந்த அணியின் அனைத்து எம்.பிக்களும் விஜயகலா பதவி விலக வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கினர். ஐக்கிய தேசியக் கட்சியின் சில எம்.பிக்களும் இதற்கு உடந்தையாக இருந்தனர். இதனால் விஜயகலா, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார்.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் தற்போது இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *