செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம்: சிலிர்ப்பூட்டும் படங்கள் வெளியீடு!

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும்.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15ஆவது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு பெருஞ்சாதனையின் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்றவகையில் அமைந்திருக்கிறது இப்புகைப்படங்கள். மார்ஸ் எக்ஸ்பிரெஸின் உயர் துல்லியம் மிக்க ஸ்டீரியோ ஒளிப்படக்கருவி மூலம் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கோரோலோவ் பள்ளத்தின் ஐந்து வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து ஒற்றைப்படமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது. பெரும் பள்ளம் குறித்தும் அதைச் சுற்றி நடப்பது குறித்து பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்ள ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட மார்ஸ் மிஷனின் பணிகள் உதவுகிறது.

கோரோலோவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்நிலப்பகுதியில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பெரும் பள்ளம் பனியால் நிறைந்ததல்ல, பனிக்கட்டிகளால் நிறைந்தது.

பள்ளத்தின் மையத்தில் பெரும் பனிக்கட்டிகள் உள்ளன. அதாவது சுமார் 1.8 கி.மீ அடர்த்தியுடன் இப்பனிக்கட்டிகள் உள்ளன.

பள்ளத்தின் ஆழம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு இருக்கிறது . கோரோலோவ் பள்ளத்தின் மிகவும் ஆழமான பகுதிகளில் பனிக்கட்டிகள் இருப்பதால் இதன் மேற்புறத்தில் காற்று செல்லும்போது அவரை பனிக்கட்டிகளின் மேல் அப்படியே படர்ந்து ஓர் அடுக்காக உருவாகிவிடுகிறது.

பாதுகாப்பு அரணாக இந்த அடுக்கு செயல்படுவதால் பனிக்கட்டிகள் அதே நிலையில் இருக்கின்றன மேலும் வெப்பமாவதில் இருந்து தடுக்கப்படுகின்றன. காற்று ஒரு மோசமான வெப்பக்கடத்தியதாக இருப்பதால் கோரோலவ் பள்ளம் நிரந்தரமாகவே பனிக்கட்டிகளால் நிறைந்திருக்கிறது என விளக்கம் அளித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி மையம்.

இப்பனிப் பள்ளத்துக்கு முன்னாள் தலைமை ராக்கெட் பொறியியலாளரும் ஏவுகணை வடிவமைப்பாளருமான செர்கெய் கோரோலோவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சோவியத்தின் விண்வெளி தொழில்நுட்பத்தின் தந்தை இவர்.

கோரோலோவ் பல சிறப்பு விண்வெளி திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். சோவியத் ஒன்றியத்தின் விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பிய மிஷன் உள்ளிட்டவற்றை அடக்கிய ஸ்புட்னிக் திட்டத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *