சர்வதேச நாடுகளின் தூதர்களுடன் சம்பந்தன் இன்று முக்கிய சந்திப்பு! – அரசியல் நிலைமை குறித்து விளக்குவார்

இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது. இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்றச் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றது. ஜனநாயகத்தை மீறும் வகையில் ஜனாதிபதி மேற்கொண்ட இந்தச் செயற்பாட்டுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றது.

தனது செயற்பாட்டுக்குக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற ஜனாதிபதி முயன்றபோது அதனைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து விளக்குவதற்கும், ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எடுத்துரைப்பதற்கும் இன்று உலக நாடுகளின் தூதுவர்களைச் சந்திக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் தூதுவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *