அதிகாரமற்ற படுமோசமான ஆட்சிக்கு உடன் முடிவுகட்ட வேண்டும் சர்வதேசம்! – வெளிநாட்டுத் தூதுவர்களிடம் நேரில் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது; மோசமானது. எனவே, இதற்கு உடன் முடிவுகட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும்.”

– இவ்வாறு உலக நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களிடம் இன்று நேரில் வலியுறுத்தியது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,

“ஜனநாயகத்தை மதிக்காமல் – அரசமைப்புக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டதால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கொழும்பிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கு இன்று நாம் விரிவாக விளக்கமளித்தோம். .

பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க அப்பதவியிலிருந்து கடந்த மாதம் 26ஆம் திகதி நீக்கப்பட்டமை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பட்டமை, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை, அந்த வழக்கில் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை, பல கோடி ரூபாக்களை எம்.பிக்களுக்குக் கொடுத்து பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்ட மஹிந்த அணியினர் எடுத்த முயற்சி, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மூன்று நாட்கள் – மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் ஜனாதிபதி எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றமை மற்றும் அரசியல் குழப்பத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் விரிவாக – ஆழமாகப் பேசினோம்.

தற்போது நாட்டில் ஓர் அரசு இல்லை; பிரதமர் இல்லை. அரசியல் தீர்வைக்காண புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் இவ்விதமான நிலைமையின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது. அதேவேளை, அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பல்வேறு கருமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களுடைய காணிகள் இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாக முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சம்பந்தமாக சாதகமான முடிவு எடுக்கப்பட வேண்டும், காணாமல்போனோர் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட அலுவலகம் முறையாகச் செயற்பட வேண்டும், பரிகாரம் வழங்குவதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டம் அமுலுக்கு வரவேண்டும், உண்மையைக் கண்டறிவதற்கு ஓர் ஆணைக்குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அடுத்த வருடம் மார்ச் மாதம் நிறைவடைவதற்கு முன்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் ஆகிய இந்தக் கருமங்கள் நாட்டில் தற்போது ஓர் அரசு இல்லாமல், பிரதமர் இல்லாமல் முடங்கியிருப்பதை நாம் அனுமதிக்க முடியாது – ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கருமங்களை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் சட்டத்தைப் பேணுவது – ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் கடினமாகும். சமூகத்துக்கு விரோதமான சக்திகள் வன்முறையில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இன மக்கள் – விசேடமாக தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம்.

பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி முறைமை இருக்கின்றபோது அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானது; மோசமானது. இவ்விதமான நிலைமை நாட்டுக்கு உகந்தது அல்ல. எனவே, இதற்கு முடிவுகட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் விளக்கமளித்தோம். தங்கள் நாட்டு உதவிகள் எமக்கு வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் எம்மிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். அந்தக் கேள்விகளுக்கு நாங்கள் உரிய முறையில் பதிலளித்தோம். தம்மால் இயன்றதை செய்வோம் என்று எம்மிடம் அவர்கள் வாக்குறுதி தந்திருக்கின்றார்கள். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. மிகவும் திருப்திகரமான சந்திப்பு. சொல்ல வேண்டிய விடயங்களை அவர்களிடம் சொல்லிவிட்டோம்” – என்றார்.

நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் இலங்கைக்கான தூதுவர்கள் கலந்துகொண்டனர். சந்திப்பின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை அவர்கள் பாராட்டினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *