நாடாளுமன்ற அமர்வு இன்று கூடி 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு! – எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் பலப்பரீட்சை

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடியிருந்தாலும் ஐந்து நிமிடங்களில் சபை அமர்வு இடைநிறுத்தப்பட்டது. எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தலைமையிலேயே கூடியது.

இதன்போது புதிய தெரிவுக்குழுக்களை தெரிவு செய்யும் செயற்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ​பெரும்பான்மை மஹிந்த அரசுக்குத் தேவை என்று தினேஸ் குணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி,) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தினேஸ் குணவர்தனவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதவர்களால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார்.

இந்தநிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, நாடாளுமன்றம் வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்படுகின்றது எனப் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய நாளுமன்ற அமர்வை பொதுமக்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பார்வையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் மாடம் மூடப்பட்டிருந்தது.

அத்துடன், விசேட அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *