தீபாவளி முடிந்தகையோடு மலையகமெங்கும் போராட்டம் – ரூ. 1000 இல்லையேல் அமைச்சுப் பதவியையும் துறப்பேன்! தொண்டா ஆவேசம்!

“ மனிதாபிமானமற்ற முறையில் செயற்படும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இனி பேச்சு நடத்தி பயன் இல்லை. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால், கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேறவேண்டும். தீபாவளி முடிவடைந்த கையோடு மலையகமெங்கும் தொடர்போராட்டங்கள் வெடிக்கும்”


இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

“ தொழிலாளர்களால் பெருந்தோட்டங்கள் உரியவகையில் பராமரிக்கப்படுகின்றன. உலக சந்தையிலும் தேயிலைக்கு நல்ல விலை இருக்கின்றது. இந்நிலையில், ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகள் ஏன் தயங்குகின்றன? தோட்ட துரைமாருக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால், தொழிலாளர்கள் சம்பளம் கோரினால் அது குறித்து ஆயிரம் கதைகள் சொல்லப்படுகின்றன.

எனவே, கம்பனிகளுடன் இனியும் பேச்சு நடத்தி பயன் இல்லை. கம்பனிகளால் முடியாவிட்டால் உடனடியாக தோட்டங்களை விட்டு வெளியேறவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் பின்பற்றமுடியாவிட்டால் இருந்து என்ன பயன்?

ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுதரமுடியாவிட்டால், பதவி விலகுவேன் என அறிவித்திருந்தேன். அதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஜனாதிபதியும், புதிய பிரதமரும் ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதன்காரணமாகவே முடிவை மாற்றினேன். எனினும், ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அமைச்சுப் பதவியையும் துறப்பேன். அது எனக்கு முக்கியமே இல்லை.

தீபாவளி முடிவடைந்ததும் மலையகமெங்கும் தொழிலாளர்கள் போராட்டம் வெடிக்கும். போராடுவதைத்தவிர வழியில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *