மைத்திரியிடம் மூன்று நிபந்தனைகள் முன்வைப்பு! – மூடிய அறைக்குள் பஸிலுடன் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பஸில் ராஜபக்சவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பின்போது – மஹிந்த அணியின் சார்பில் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இம்மூன்று நிபந்தனைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றும் பட்சத்தில், அவர்மீது நம்பிக்கைவைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவதற்கு மஹிந்த அணி தயாராக இருக்கின்றது என அவ்வணியின் எம்.பியொருவர் ‘புதுச்சுடர் ‘ இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், கூட்டுஎதிரணியும் இணைந்து இடைக்கால மேற்பார்வை அரசை அமைக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, இருதரப்புமே இது குறித்து தீவிரமாக பரிசீலித்துவருவதுடன், பேச்சுகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பஸில் ராஜபக்சவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இடைக்கால அரசமைப்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி பக்கமுள்ள சு.க. உறுப்பினர்களை நம்புவதற்கு கூட்டுஎதிரணி உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர் என பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அதேவேளை, பொலிஸ்மா அதிபரை பதவியைவிட்டு நீக்குதல், பக்கச்சார்பற்ற பிரதம நீதியரசர் ஒருவரை நியமித்தல், ராஜபக்சக்களின் குடும்ப பாதுகாப்பை உறுதிப்படுடத்தல் ஆகிய நிபந்தனைகளை பஸில் முன்வைத்துள்ளார்.இம்மூன்று நிபந்தனைகளையும் ஜனாதிபதி நிறைவேற்றும் பட்சத்தில் மாத்திரமே அடுத்தக்கட்டம் நோக்கி நகரமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரமே பிரதம நீதியரசர் பதவிக்கு ஒருநபரின் பெயரை மாத்திரம் அரசமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்தார் என கூறப்படுகின்றது. பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் விவகாரத்திலேயே இழுபறி இடம்பெற்றுவருகின்றது.


அதேவேளை, சுதந்திரக்கட்சி வெளியேறினாலும் தனியாட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராகவே இருக்கின்றது என அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *