மைத்திரி கொலைச் சதி: பாரதூரமான விடயத்தை மலினப்படுத்த முயற்சி! – கொதிக்கின்றனர் ஜனாதிபதியின் ஆலோசகர்கள்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான கொலைச் சதி முயற்சி மிகவும் பாரதூரமானது. ஆனால்,இது நாடகம் எனத் தெரிவித்து விடயத்தை மலினப்படுத்தி, சிறுமைப்படுத்த பலர் முயற்சிக்கின்றார்கள். இந்த விவகாரத்தை மூடி மறைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபாலவின்சிறிசேனவின் ஆலோசகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது கொலைச் சதி முயற்சியின் பின்னால் இந்தியாவின் ‘றோ’ அமைப்பு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்தி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர்களான லக்திலக்க மற்றும் சரத் ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

இந்தச் சந்திப்பில் லக்திலக தெரிவித்ததாவது:-

“உண்மைகள் மறக்கப்படும் சம்பவங்கள் எங்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கையிலும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றையெல்லாம் அரசியல் கொலைகள் என்று கூறமுடியாது.

ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிரான கொலை முயற்சியை நாடகம் என்று சொல்லி அதனை நிராகரிக்க சிலர் முற்படுகின்றனர். மைத்திரிபாலவுக்கு எதிரான கொலைச் சதி தொடர்பில் தகவல் வெளியிட்டவர் முக்கியமல்ல. அவர் கூறிய விடயம்தான் முக்கியமானது.

இந்தச் சதி முயற்சி உண்மையில்லை என்றால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பதவி விலக்குவதற்கு சட்டம், ஒழுங்கு அமைச்சு கோரியது ஏன்? இந்தக் கொலை முயற்சி அரசியல் சூழ்ச்சியாகவும் இருக்கலாம்.

இந்தக் கொலைச் சதி விவகாரத்தை மூடிமறைப்பதற்கு, இதனைக் குறைத்து மதிப்பிடுவதற்குப் பலரும் தொடர்ந்தும் முயற்சிக்கின்றார்கள்” – என்றார்.

ஜனாதிபதியின் மற்றொரு ஆலோசகரான சரத் தெரிவித்ததாவது:-

“தற்போது பதவி நீக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனது சட்டத்தரணியாக என்னைச் செயற்படக் கோரினார். அதற்கு நான் மறுத்து விட்டேன். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் சேவையைப் பெற்றுள்ளார்.

நாட்டின் தலைவராக இருந்த பண்டாரநாயக்க முதலில் கொல்லப்பட்டார். 1963ஆம் ஆண்டு சிறிமாவோவைக் கொல்லுவதற்குச் சதி செய்யப்பட்டது. ஆனால், அது கண்டுபிடிக்கப்பட்டது. ரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். 1999ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது சந்திரிகாவைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டுக்குள்ளேயே மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்ல முயற்சிக்கப்பட்டது. சினைப்பர் துப்பாக்கியுடன் ஒருவர் கைதானார். கடந்த கால நிலைலமைகள் இதுவாக இருக்கையில் ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து குறைத்து மதிப்பிடவேண்டாம். இதனைப் பொய் நாடகம் என்றும் கூறமுடியாது” – என்றார்.

“ஜனாதிபதி கொலைச் சதியுடன் தொடர்புடையதான சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியர் மனநலம் குன்றியவர் என்றால் அவரின் மருத்துவ அறிக்கை ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், இந்தக் கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் பெயர் அடிபட்டது. அவர் தற்போது மேற்குல நாட்டுக்குச் செல்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஏன் அவர் தற்போது வெளிநாடு செல்ல முற்படுகின்றார்? இந்தக் கொலைச் சதியில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’ சம்பந்தப்பட்டுள்ளது என ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டது. அது தொடர்பில் ஊடகப் பிரிவு விளக்கமளித்து விட்டது. ஆனாலும், வீட்டில் உள்ள நெருப்பை வெளியே கூறியது தவறாகும்”- என்று லக்திலக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *