வடக்கு, கிழக்குக் கல்வி விருத்திக்கு உதவி புரியவேண்டும் தமிழக அரசு! – யாழ். வந்த செங்கோட்டையனிடம் கோரிக்கை

“யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் போன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். விவசாய ஆராய்ச்சி மையங்கள் வேண்டும். இங்குள்ள பல்கலைக்கழகங்களைச் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், விவசாயப் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் யாழ். வந்த தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 50ஆயிரம் புத்தகங்களை யாழ். பொது நூலகத்துக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வு யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றபோதே தமிழ் மக்கள் சார்பாக மக்களின் பிரதிநிதிகள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் போன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டு மாணவர்களுக்கான புலமைகளை உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அங்கு உரையாற்றிய விவசாயப் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், “வடக்குக்கு விவசாய ஆராய்ச்சி மையங்கள் தேவை. இங்குள்ள விவசாயிகளுக்குப் புதிய தொழில் நுட்பமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இங்குள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படவேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனும் கோரினார்.

இவற்றுக்குப் பதிலளித்த தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,

“விவசாய ஆராய்ச்சி மையம் வடக்குக்குத் தேவை என்று இலங்கையின் விவசாயப் பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு, கோவையில் உள்ள வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 1642 வோளாண்மைப் பேராசிரியர்கள் உள்ளார்கள். இதனால் பல வேளான்மை ஆராய்வுகளை மேற்கொள்கின்றேம். இவ்வாறான ஓர் ஆராய்ச்சி மையத்தையே பிரதி அமைச்சர் என்னிடம் கோரியிருக்கின்றார். அது தொடர்பான கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் எனக்குச் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பில் தமிழக முதலமைச்சருடனும்,வோளான்மைத்துறை அமைச்சருடனும் பேசி நல்ல முடிவைத் தருவேன்.

இதேபோன்று பல்கலைக்கழகங்களை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணக் கல்விஅமைச்சரும் கேட்டிருக்கின்றனர். இந்த விடயங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் தேவைகள் தொடர்பிலும் தமிழக முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தி அவர் ஊடாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *